அடுத்த ஆட்டத்தில் பாண்ட்யாவை சீக்கிரம் வீழ்த்துவேன்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

அடுத்த ஆட்டத்தில் பாண்ட்யாவை சீக்கிரம் வீழ்த்துவேன்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா

அடுத்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவை சீக்கிரமாக வீழ்த்துவேன் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கூறியுள்ளார்.சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 87 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (83 ரன்), விக்கெட் கீப்பர் டோனி (79 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 281 ரன்கள் குவித்தது. பிறகு மழை பெய்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு 21 ஓவர்களில் 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 9 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுக்க முடிந்தது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

117முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் 25 வயதான ஆடம் ஜம்பா 66 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். அவரது ஒரே ஓவரில் ஹர்திக் பாண்ட்யா, பவுண்டரியுடன், ‘ஹாட்ரிக்’ சிக்சரும் பறக்கவிட்டு மிரட்டினார். ஆடம் ஜம்பா, கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெருக்கடிக்கு மத்தியில் பந்து வீசுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக, எனது வியூகத்தை துல்லியமாக செயல்படுத்த தவறி விட்டேன். அவரை அடிக்க விடாமல் தடுப்பது முக்கியமானதாக இருந்தது. அந்த மூன்று பந்துகளை எளிதில் விளாசும் வகையில் வீசி விட்டேன். ஹர்திக் பாண்ட்யா சிறந்த வீரர். அவரை போன்ற வீரர்களுக்கு கச்சிதமாக பவுலிங் செய்யாவிட்டால், அதன் பிறகு பந்து எல்லைக்கோட்டை தாண்டி தான் போய் கொண்டு இருக்கும்.

மைதானத்தின் அளவை பொறுத்து பேட்ஸ்மேன்களுக்கு சரியான உயரத்தில் (லெந்த்) பந்து வீச வேண்டியது இங்கு முக்கியமாகும். ஆஸ்திரேலிய மைதானங்களில் லெந்த் அளவை கொஞ்சம் மாற்றி வீசலாம். ஏனெனில் அங்குள்ள மைதானங்கள் ஒரே மாதிரியாக கிட்டத்தட்ட முட்டை வடிவில் தான் இருக்கும். ஆனால் இங்கு துல்லியமான உயரத்தில் பந்து வீசாவிட்டால் நாம் விரும்பாதவை (தொடர்ந்து 3 சிக்சர்) எல்லாம் நிகழும். ஆனால் கிரிக்கெட்டில் இதுவெல்லாம் சகஜம். ஷேன் வார்னேவுக்கு கூட இந்த மாதிரி நடந்துள்ளது. எனது பந்து வீச்சில் 20-30 ரன்கள் குறைவாக விட்டுக்கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த மாதிரி சூழ்நிலையில், நம்மை அதிகமாக நெருக்கடிக்குள்ளாக்கி விடக்கூடாது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவை சீக்கிரம் வீழ்த்துவேன் என்று நம்புகிறேன்.

இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தவிக்கும் போது, டோனி பல முறை இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார். நீண்ட காலமாக இந்த மாதிரி அவர் விளையாடி வருகிறார். இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யாவை வழிநடத்திக்கொண்டு, இன்னொரு முனையில் அணிக்கு உதவிகரமாக இருந்தார். டோனி-பாண்ட்யா பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் வகையில், மிடில் ஓவர்களில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இல்லை.

மேலும், மழையின் பாதிப்பும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. மழையின் தாக்கத்தையும் நாங்கள் சமாளிக்க வேண்டி இருந்தது. 50 ஓவர்கள் போட்டியாக முழுமையாக நடந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு ஓரளவு மாறியிருக்கும். இந்திய பவுலர்கள் மிக அருமையாக பந்து வீசினர். குறிப்பாக 35 ரன்னுக்கு 4 விக்கெட் என்ற நிலையில், இரண்டு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது கடினமாகும்.

இந்திய அணியில் 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், கடைசியில் தோல்வியை சந்தித்தது தான் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இவ்வாறு ஆடம் ஜம்பா கூறினார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறுகையில், ‘நான் எப்போதும் கவுதம் கம்பீருக்கு (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன்) நன்றி கடன்பட்டவனாக இருப்பேன். வெளி உலகுக்கு நான் அதிகம் தெரியாத நிலையிலும், எனக்கு பக்கபலமாக இருந்து ஊக்குவித்தவர், கம்பீர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணிக்காக விளையாடியது சிறப்பு வாய்ந்தது. என்னை பொறுத்தவரை இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். அதே சமயம் அவரை போன்ற ஒருவர் என்னை வழிநடத்த வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *