அமெரிக்காவில் ‘இர்மா’ புயலுக்கு 3 பேர் பலி 60 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

அமெரிக்காவில் ‘இர்மா’ புயலுக்கு 3 பேர் பலி 60 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

114

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை ‘இர்மா’ புயல் பயங்கரமாக தாக்கியது. இதில் 3 பேர் பலியாயினர்.கரீபிய கடல் பகுதியில் உருவான இர்மா புயல் 2 நாட்களுக்கு முன்பு கியூபா நாட்டின் ஹவானா நகரை தாக்கியது. அங்கு இந்த புயலுக்கு 24 பேர் பலியாயினர்.

பின்னர் இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்தது. ஆரம்பத்தில் மணிக்கு 150 முதல் 170 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் நகர்ந்த இந்த புயல் 4-ம் நிலைப் புயலாக மாறி அமெரிக்காவின் தீவு நகரான கீ வெஸ்ட்டை தாக்கியது. அப்போது கனத்த மழையும் கொட்டியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

60 லட்சம் பேர் வெளியேற்றம்

புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதி கடற்கரையோர நகரங்களான நேப்பிள்ஸ், மைமர்ஸ், டம்பா ஆகியவற்றை இர்மா தாக்கும் என்பதால் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் புயலுக்காக 60 லட்சம் பேர் இடம் பெயர்ந்தது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆவர்.

பயங்கரமாக தாக்கியது

எதிர்பார்த்தவாறே இர்மா புயல் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் (இந்திய நேரம் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி) கோரத் தாண்டவம் ஆடியது. பல இடங்களில் புயலின் வேகம் மணிக்கு சராசரியாக 210 கிலோ மீட்டர் ஆகவும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்திலும் இருந்தது. 80 கிலோ மீட்டர் அகலத்திற்கு சூறைக்காற்று வீசியதால் இந்த எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் இருந்த அத்தனை நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேலும், புயல் தாக்கத் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக பெய்யத் தொடங்கிய கனமழை புயல் நகர்ந்து சென்ற பிறகும் தாக்கம் நீடித்தது. அப்போது அதிகபட்சமாக 36 சென்டி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது.

இருளில் மூழ்கின

இர்மா புயலின் வேகம் காரணமாக மியாமி, நேப்பிள்ஸ், மைமர்ஸ், தம்பா நகரங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும், மின்கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள், விளம்பர பலகைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன.

புயல் தாக்கிய பகுதிகளில் மின் இணைப்பு முன்கூட்டியே துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 10 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருளில் மூழ்கின. 3 நகரங்களும் புயலின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாயின. விமான சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.

புளோரிடா மாகாணத்தின் கவர்னர் ரிக் ஸ்காட், இர்மா புயலை முக்கிய பேரழிவாக அறிவிக்கும்படி ஜனாதிபதி டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 16 மாகாணங்களில் இருந்து உதவி கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

3 பேர் பலி

இதற்கிடையே ஜனாதிபதி டிரம்ப், தனது மந்திரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். புளோரிடாவில் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அவர் உத்தரவிட்டார்.

இர்மா புயலுக்கு புளோரிடா மாகாணத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் ஹார்டி மாவட்டத்தின் துணை ஷெரீப்பும் ஒருவர் ஆவார். இந்த புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
வேகம் தணியும்

தற்போது இர்மா புயல் புளோ ரிடா மாகாணத்தின் வடமேற்கு கடற்கரையையொட்டி நகர்ந்துள்ளது. இது வடக்கு புளோரிடாவையோ, தெற்கு ஜார்ஜியாவையோ தாக்கலாம் என்றும் அமெரிக்க வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதேநேரம், இனி புயலின் வேகம் சற்று தணியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், மழை கொட்டித் தீர்க்கும் என்பதால் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *