ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள்மீது இன்று பரிசீலனை! | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள்மீது இன்று பரிசீலனை!

 

election_09595

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது, தேர்தல் ஆணையம். தொடர்ந்து, அதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சியினரும் களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டுவந்த வேளையில், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, அந்தத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால், இந்த முறையும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. கடந்த முறை, முதன்முதலில் வேட்பாளரை அறிவித்து போட்டியிட்ட தே.மு.தி.க., இந்த முறை போட்டியிடவில்லை என அறிவித்ததுடன், தம் ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் தெரிவித்துவிட்டது. அதேவேளை, முதல்முறையாக நடிகர் விஷாலும் ஆர்.கே.நகர் தொகுதி களத்துக்குள் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். பிற கட்சியினரும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் தாக்கல்செய்துள்ள வேட்புமனுக்கள்மீது பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான இறுதிநாள், டிசம்பர் 5 என்றும், நாளை மறுநாள் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *