ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி? திருமாவளவன் | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி? திருமாவளவன்

tholthirumavalavan244-06-1512533610

சென்னை:

தொடர்ந்து சிக்கல்களை எழுப்பி ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய அதிகாரத்தில் இருப்பவர்கள் திட்டமிடுகிறார்களோ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். ஆர்.கே நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களின் மீது நேற்று பரிசீலனை நடந்தது. இதில் தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், போதிய தகவல்கள் இல்லாத நிலையில் பல்வேறு சுயேட்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதில் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஜெ.தீபா மனுவும், போலி கையெழுத்து இருந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், பலகட்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விஷாலின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரி முன்னுக்குபின் முரணாக செயல்படுகிறார். இதனால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்தரப்பு வேட்பாளரை முன்மொழிந்தவர்களை மிரட்டி வேட்புமனுவை நிராகரிக்க செய்துவிட முடியும் என்பதற்கு இந்தத் தேர்தல் உதாரணமாகி விடும் என்றும், இதனால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து உள்ளார். ஏற்கனவே, அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததால், ஆர்.கே நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த முறையும் இது போன்ற காரணங்களால் தேர்தலை நிறுத்த சிலர் சதி செய்துள்ளார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அவற்றிற்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் சிறப்பான முறையில் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை வைத்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *