இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் – பாகிஸ்தான் அலறல் – Maduraimani
Friday, April 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் – பாகிஸ்தான் அலறல்

இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி மத்திய துணை ராணுவப்படை வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தன. இதற்கு பதிலடி தருவதற்காக, மறுநாள், இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இந்திய விமானி அபிநந்தனை பிடித்து சென்றது.

பின்னர், விமானியை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இத்தகைய சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளன.

இந்நிலையில், இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளது. முல்தான் நகரில் நேற்று பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்முத் குரேஷி இதை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் வகுத்துள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. தாக்குதலுக்கான ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது. இந்த தகவலின்படி, ஏப்ரல் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் தாக்குதல் நடக்கலாம்.

ஏற்கனவே நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தவும், பாகிஸ்தான் மீது தூதரக ரீதியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவும் இந்த தாக்குதலில் இந்தியா ஈடுபட உள்ளது.

இதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களிடம் ஏற் கனவே முறையிட்டு விட்டோம். பாகிஸ்தானின் கவலையையும் தெரிவித்துள்ளோம். சர்வதேச நாடுகள், இந்தியாவின் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையை கவனத்தில் கொண்டு, அந்நாட்டை கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்த பிராந்தியத்தில் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், பாகிஸ்தான் மந்திரியின் இந்த அலறல் பேச்சை அங்குள்ள எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி கண்டுகொள்ளவில்லை.

அக்கட்சியின் மூத்த தலைவர் நபீசா ஷா கூறுகையில், “பாகிஸ்தான் அரசு செயல்படவே இல்லை. இப்போது, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, இந்தியாவின் போர் அச்சுறுத்தலை பயன்படுத்துகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *