ஐகோர்ட்டு எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஐகோர்ட்டு எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு ஆசிரியர்கள்-அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ -ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இருப்பினும் கோர்ட்டு தடையை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோர்ட்டு உத்தரவை மதிக்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மீண்டும் வக்கீல் சேகரன் மனுத்தாக்கல் செய்தார்.

 

112

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் ஐகோர்ட்டின் தடை உத்தரவு நோட்டீசை சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் ஆகியோர் 15-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதன்படி சங்க நிர்வாகிகள் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கு 11 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் பொதுநலன் கருதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.

எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால் தலைமை செயலாளர் முன்னிலையில் வருகிற திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை நீதிமன்றம் அறியும். உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் நீதிமன்றம் ஈடுபடும்.

எனவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது கோர்ட்டில் ஆஜரான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ் ஆகியோர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக தயக்கம் தெரிவித்தனர்.

உடனே நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மதிக்காதது கண்டிக்கத்தக்கது. நீங்கள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒரு மணி நேரத்தில் வேலையில் இருந்து நீக்கி உத்தரவிட எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை தெரிவிக்குமாறு கூறி சில நிமிடங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி கோர்ட்டு வளாகத்திலேயே ஆலோசனை நடத்தி விட்டு சிறிது நேரத்திலேயே ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மீண்டும் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்கள்.

அப்போது நீதிபதிகள் போராட்டத்துக்கு கோர்ட்டு தடை விதித்தும் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். எந்த அடிப்படையில் நீங்கள் போராட்டத்தை தொடர்கிறீர்கள் என்று கேட்டனர்?.

அதற்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நாங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியாக போராடி வருகிறோம். அதற்கு நீதிபதிகள் கோர்ட்டு தடை விதித்த சூழ்நிலையில் நீங்கள் கோரிக்கைகளை கோர்ட்டில் தெரிவித்திருந்தால் அதற்கேற்ப நாங்கள் உத்தரவிட்டு இருப்போம் என்றனர்.

இதையடுத்து ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகள் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று மதியம் 2 மணிக்கு மேல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக வருகிற 21-ந்தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜராக வேண்டும் என கூறி அன்றைய தினம் வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *