ஓகி புயல் பாதிப்பில் இருந்து மீளாத குமரி மக்கள் | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஓகி புயல் பாதிப்பில் இருந்து மீளாத குமரி மக்கள்

x06-1512527713-cyclone-ockhi116.jpg.pagespeed.ic.kv95DR6k7n

கன்னியாகுமரி:

ஓகி புயல் சூறையாடிய குமரி மாவட்டத்தில் 7 நாட்களாகியும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சாரம், குடிநீர் இன்றி அம்மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தாக்கியதில் தென் தமிழகத்தில் உள்ள குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் சேதமடைந்தன. புயல் ஆடிய கோரத்தாண்டவத்திற்கு அதிகம் பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம்தான்.
குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகரிலும் ஏராளமான மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் சேதம் அடைந்து உள்ளது. கிராமங்களில் அதிகளவு மின் கம்பங்கள் சரிந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கியது. மலை கிராமங்களிளும், தேயிலை தோட்டங்களில் வசிப்பவர்களும் தவித்து வருகின்றனர்.
றச்சகுளம், பூதப்பாண்டி, தாழக்குடி, சாமித்தோப்பு, ஆண்டிவிளை, மணக்குடி என்று பல்வேறு பகுதிகளில் மக்கள் மின்சாரம் எப்போது வரும் என்று தவித்தபடி உள்ளனர். மின்வினியோகம் பாதிக்கப்பட்டதால் குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இரவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மின்சாரம் இல்லாததாலும் குழந்தைகள், முதியவர்கள், தூங்க முடியாமல் அவதிபடுகிறார்கள். இருள் பயம் காரணமாக பெண்களும் பல இடங்களில் விடிய, விடிய விழித்திருந்தே காலத்தை கடத்தி வருகிறார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் 1157 கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவற்றில் 228 கிராமங்களுக்கு மட்டுமே இதுவரை மின்வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரத்தைப் பொருத்தவரை பல பகுதிகளுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுவிட்டது.
கிராமப்புறங்களில் தெருக்கள் மிகவும் குறுகலாக இருப்பதால் மின்கம்பங்களை விரைந்து சீரமைத்து மின்சாரம் வழங்குவதில் மின் ஊழியர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. 7 நாட்களாகியும் மின்வினியோகம் முழுமையாக கொடுக்கப்படாததால் பொதுமக்கள் இருளில் தவிக்கின்றனர்.
மின்வினியோகம் முழுமையாக கொடுக்கப்படாததால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பொது மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *