ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சாய்னா நேவால், பி.வி.சிந்து பங்கேற்பு | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சாய்னா நேவால், பி.வி.சிந்து பங்கேற்பு

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியாவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.ரூ.2 கோடி பரிசுத் தொகைக்கான ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் களம் காணுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த கொரியா ஓபன் போட்டியில் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி.வி.சிந்து, இந்த ஆண்டில் 3-வது சூப்பர் சீரிஸ் பட்டத்தை வெல்ல ஆர்வம் காட்டுவார்.

இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, 19-ம் நிலை வீராங்கனை மினாட்சு மிதானியை (ஜப்பான்) சந்திக்கிறார். முதல் தடையை வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்துவுக்கு பலத்த சவால் காத்து இருக்கிறது. அவர் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை சந்திக்க நேரிடும்.

119

சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காயத்தால் ஓய்வு எடுத்து விட்டு இந்த போட்டிக்கு திரும்புகிறார். 2½ ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியாளர் கோபிசந்தின் அகாடமியில் இருந்து பிரிந்து பெங்களூரில் உள்ள பயிற்சியாளர் விமல்குமாரிடம் பயிற்சி பெற்ற சாய்னா நேவால் சமீபத்தில் மீண்டும் கோபிசந்தின் அகாடமியில் இணைந்தார். அதன் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் போட்டி இதுவாகும். உலக தர வரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், தனது முதல் சுற்று ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் பொம்பாவீ சோசுவாங்கை சந்திக்கிறார். சாய்னா முதல் சுற்றை தாண்டினால் அடுத்த சுற்றில் அவருக்கும் கடும் பலப்பரீட்சை காத்து இருக்கிறது. அவர் ஒலிம்பிக் சாம்பியன் கரோலின் மரினை (ஸ்பெயின்) எதிர்கொள்ள வேண்டியது வரும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா, முன்னாள் நம்பர் ஒன் வீரரான லின் டானை (சீனா) சந்திக்கிறார். இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய், சமீர் வர்மா ஆகியோரும் இந்த போட்டியில் கால் பதிக்கிறார்கள்.

1982-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்தியர்கள் யாரும் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 11-21, 21-18, 14-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் யூ இகரஷியிடம் தோல்வி கண்டு பிரதான சுற்று வாய்ப்பை இழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *