தீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை… போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி | Maduraimani
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை… போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி

madhavan333-1518587559

சென்னை:

ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தான் கூறிய வாக்குமூலம் உண்மையில்லை என்றும் போலி வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் திடீர் பல்டி அடித்துள்ளார். தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில், கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரி அதிகாரி மித்தேஷ் குமார் என்ற பெயரில் சர்ச் வாரண்டுடன் ஒருவர் வந்திருந்தார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால் போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் வந்து விசாரணை நடத்தியபோது அந்த இளைஞர் தப்பியோடினார்.

இதுகுறித்து தீபா கணவர் மாதவன் மாம்பலம் போலீஸில் புகார் அளித்தார். மேலும் தப்பியோடிய நபரை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விசாரணையில் அவர் பெயர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அவராகவே வந்து சரணடைந்துள்ளார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொடுத்த வாக்குமூலத்தில், வருமானவரி சோதனை நாடகத்திற்கு பின்னணியில் செயல்பட்டவர் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதற்கான மாதவன் ஒத்திகை நடத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம், வீடியோ காட்சியாக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.
தீபாவிடம் உள்ள சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றவே இது போல் ஒரு டிராமாவை மாதவன் நடத்தியதாக கூறப்படுகிறது. பிரபாகரன் வாக்குமூலம் அளித்த நிலையில் மாதவனிடம் விசாரணை நடத்த அவரை தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. சுமார் 3 நாட்களாக அவர் தலைமறைவாகவே உள்ளார்.
கைதான போலி வருமானவரி அதிகாரி பிரபாகரன் திடீரென்று பல்டி அடித்து நான் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மை இல்லை என்றும், ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் போலீஸாரிடம் கூறியிருப்பதாக புதிய தகவல்கள் நேற்று வெளியானது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இதையடுத்து பிரபாகரனுடன் தொடர்புடைய 3 பேரிடம் விசாரணை நடத்தினோம். அவர்களில் ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர். அவர் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, பிரபாகரன் வருமானவரி அதிகாரி போன்ற அடையாள அட்டை, வருமானவரித்துறையினரின் வாரண்டு போன்றவற்றை போலியாக தயாரித்தது ஆனந்தவேல் நடத்தும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தான் என்று தெரியவந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாதவனுக்கு தொடர்பு இல்லை என்றும், பிரபாகரன் தான் போலி அடையாள அட்டை, போலி வாரண்டு போன்றவற்றை தயாரித்தார் என்றும் ஆனந்தவேல் குறிப்பிட்டார். போலி அடையாள அட்டை மற்றும் போலி வாரண்டு போன்றவற்றை தபால் மூலமாக மாதவன் தனக்கு அனுப்பி வைத்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட கூரியர் நிறுவனத்தில் விசாரித்தபோது அதுபோன்ற தபால் எதையும் அனுப்பவில்லை என்று தெரியவந்தது. மேலும் வாட்ஸ்-அப் வாயிலாகத்தான் மாதவன் தன்னிடம் செல்போனில் பேசினார் என்று பிரபாகரன் குறிப்பிட்டார். அதுபற்றி ஆய்வு செய்தபோது அதுவும் உண்மை இல்லை என்று தெரியவந்தது. அதன்பிறகு பிரபாகரன் கூறியது பொய் என்று தெரியவந்ததால் அவரிடம் விசாரிக்க வேண்டிய முறையில் தீவிரமாக விசாரித்தோம். அதன்பிறகு தான் கூறியது அத்தனையும் பொய் என்று பிரபாகரன் ஒப்புக்கொண்டார்.
ஷேர் மார்க்கெட் தொழிலில் பிரபாகரனுக்கு ரூ. 20 லட்சம் கடன் ஏற்பட்டதாகவும் அதை அடைப்பதற்காக வருமான வரித் துறை அதிகாரி போல் தீபா வீட்டுக்கு சென்று பணம் பறிக்க இதுபோல் நாடகத்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனுக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றி மேலும் தீவிரமாக விசாரிக்க உள்ளோம். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *