பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கமாட்டேன்: ஷேவாக் சொல்கிறார் | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கமாட்டேன்: ஷேவாக் சொல்கிறார்

112

எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று ஷேவாக் கூறியுள்ளார்.கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்பிளே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் 38 வயதான ஷேவாக் உள்பட பலர் விண்ணப்பித்தனர்.

கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நடத்திய நேர்காணல் முடிவில் ஷேவாக்கின் பெயர் நிராகரிக்கப்பட்டு புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனுபவம் வாய்ந்த ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்த ஷேவாக் இது தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

இந்திய அணியின் பயிற்சியாளராக ஆக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் நிர்வாகிகள் என்னை அணுகி, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதன் பின்னர் கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசித்தேன். அவரும் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். அதன் பிறகே நான் விண்ணப்பத்தை அனுப்பினேன். எனது கருத்தை நீங்கள் கேட்டால், எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை என்றே செல்வேன்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்த போது அங்கு இருந்த நான் ரவிசாஸ்திரியுடன் பேசினேன். நீங்கள் ஏன் இன்னும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு ரவிசாஸ்திரி, நான் ஏற்கனவே பொறுப்பில் இருந்து விட்டேன். இந்த தவறை மீண்டும் ஒரு முறை செய்யமாட்டேன் என்று என்னிடம் சொன்னார்.

ஆனால் அவர் அதன் பிறகு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். அவர் மட்டும் முன்கூட்டியே விண்ணப்பித்து இருந்தால் நான் பயிற்சியாளர் பதவி குறித்து யோசித்தே இருக்கமாட்டேன்.

பயிற்சியாளரை நியமிப்பவர்கள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்பட முடியாது. எனவே மீண்டும் ஒரு முறை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கமாட்டேன்.

இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *