பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழும்: எடியூரப்பா – Maduraimani
Friday, April 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு கவிழும்: எடியூரப்பா

பெங்களூரு :

பாராளுமன்ற தேர்தலையொட்டி கொப்பல் தொகுதிக்கு உட்பட்ட கங்காவதியில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக கூட்டத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இது நடைபெறும். 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வெறும் 37 தொகுதிகளில் வென்ற ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி செய்கிறது.

மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஊடகங்கள் அதை வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஊடகங்களை மிரட்டும் வகையில் குமாரசாமி பேசியுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். இதற்காக குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த தேர்தலில் குமாரசாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். ஆனால் இந்த கூட்டணி அரசு அந்த திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது.

கூட்டணி கட்சிகள் பண பலம், சாதி பலம், அதிகார பலத்தை கொண்டு தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. இது சாத்தியமில்லை. அந்த கட்சிகளுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் வளர்ச்சியில் கர்நாடகம் 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை மோடி ஜனாதிபதி ஆக்கியுள்ளார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல் கலாமை பா.ஜனதா ஜனாதிபதி ஆக்கியது. நாங்கள் சாதி, மத அரசியலை செய்வது இல்லை.

நாங்கள் அனைத்து சாதி, மதத்தினரையும் முன்னேற்ற பாடுபடுகிறோம். ஆனால் நாங்கள் சாதி அரசியல் செய்வதாக முத்திரை குத்துகிறார்கள்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *