மகாராஷ்டிரத்தில் பிரசாரம் ஓய்கிறது: வேட்பாளர்கள் தீவிர ஓட்டுவேட்டை – Maduraimani
Monday, June 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மகாராஷ்டிரத்தில் பிரசாரம் ஓய்கிறது: வேட்பாளர்கள் தீவிர ஓட்டுவேட்டை

மும்பை :

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக வரும் 11-ந் தேதி வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், , யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான கடந்த 28-ந் தேதிக்கு பிறகு, பிரசாரம் சூடுபிடித்தது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், மாநில அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்களும் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது.

மேலும், செல்போன் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், டுவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் நாளை மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி யாராவது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்து 181 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் ஆண்களும், 63 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்களும் அடங்குவர், 181 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

இதற்காக 14 ஆயிரத்து 919 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 44 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 73 ஆயிரத்து 837 ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துதர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கொளுத்தும் வெயிலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்கு குடிக்க தண்ணீரும், நிழலுக்காக பந்தலும் அமைக்கப்படுகிறது.

தேர்தலுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வழங்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 11-ந் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப்போடலாம். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மாலை 6 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அனைவரும் வாக்களித்த பிறகே அந்த பூத்தில் வாக்குப்பதிவு முடிக்கப்படும்.

மேலும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி- சிமூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தேர்தல் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *