ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்… பிரதமர் பெருமிதம்! | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்… பிரதமர் பெருமிதம்!

Tamil_News_large_1998906 modi-defence-expo-2018111-1523512361

சென்னை :

ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி பேருதவியாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றிய போது கூறியதாவது : 10வது ராணுவ கண்காட்சி இது, சிலர் இந்த கண்காட்சியை இதற்கு முன்னர் கண்டிருப்பீர்கள். ஆனால் நான் இப்போது தான் முதன்முறையாக ராணுவ கண்காட்சியில் பங்கேற்கிறேன். சோழர்கள் ஆண்ட காஞ்சிபுரம் மண்ணில் ராணுவ கண்காட்சி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
500 உள்நாட்டு நிறுவனங்கள், 155 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் பிரதிநிதிகளை கண்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி பேருதவியாக இருக்கும்.

போர்க்களத்தில் மட்டுமல்ல ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் நாம் திறமையை காட்ட இருக்கிறோம். இந்தியாவிற்கான ராணுவ தளவாடங்கள் தேவையை பூர்த்தி செய்வதோடு உலக நாடுகளுக்கும் தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய உறுதி ஏற்றுள்ளோம்.

அசோகர் காலத்திற்கு முன்பிருந்தே, மனிதாபிமானத்தில் இந்தியாவுக்கு நம்பிக்கையுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் உலக போரில் வீரமரணமடைந்தனர். எல்லைகளை பிடிக்க இந்திய ராணுவம் போரிடவில்லை, அமைதிக்காக போரிட்டு இறந்தனர்.

2000 வருடங்கள் முன்பு அர்த்த சாஸ்திரம் எழுதியுள்ளார் கவுடில்யர். அரசு உள்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கவுடில்யர் கூறி இருக்கிறார். பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தனியார் பங்களிப்புக்கு முதன்முதலில் அனுமதி அளித்தது வாஜ்பாய் தலைமையிலான அரசு. பாதுகாப்புத்துறை உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை ஈடுபடுத்த தேவையான கொள்கைகள் வகுக்கப்படும்.

பாதுகாப்பு தளவாட உற்பத்தி வளாகத்தை தமிழகத்திலும், உத்திரபிரதேசத்திலும் அமைக்க உள்ளோம். தமிழகத்தில் அமைக்கப்படும் பாதுகாப்புத்துறை உற்பத்தி வளாகம் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்புத்துறை உற்பத்திக்கு உதவும். அனைவரும் கனவு காண வேண்டும் என்று அப்துல்கலாம் சொன்னார். கனவி சிந்தனையாகவும் சிந்தனை செயலாகவும் மாற வேண்டும்.

இதற்கு முன்னர் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசால் செய்யப்பட்ட கொள்கை முடக்கம் தற்போதைய அரசால் நீக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். காலை வணக்கம் என்று கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி திருக்குறளை மேற்கோள் காட்டி தன்னுடைய உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *