வண்ணமடிக்கப் போகிறீர்களா? | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

வண்ணமடிக்கப் போகிறீர்களா?

shutterstock69583471

பொங்கல் இன்னும் ஒரு மாதத்தில் வரவுள்ளது.வீட்டுக்கு வண்ணமடிப்பது பொங்கலின் விசேஷங்களில் ஒன்று. வண்ணம் அடிப்பது எளிய வேலையல்ல. புதுக்குடித்தனம் போவதுபோல, வீட்டைத் தலைகீழாகப் புரட்ட வேண்டிவரும். அதனால் வண்ணமடிப்பதற்கு முன்பு திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

எப்போது தொடங்கி எத்தனை நாட்களில் முடிக்கப்போகிறோம் என்பதை முதலில் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். ஒரே மூச்சில் முழு வீட்டையும் வண்ணம்பூசப் போகிறீர்களா, தவணை விட்டு அறை, அறையாக வண்ணம் பூசப்போகிறீர்களா என்று முடிவு செய்துகொள்ளுங்கள். என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை ஆராயுங்கள். இணையத்தில் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். கடைகளுக்கும் சென்று சந்தையில் கிடைக்கும் பெயிண்டுகள் குறித்து விசாரிக்கலாம். அளவு, தரம், வண்ணப் பொருத்தம் குறித்து சரியான ஆலோசனைகளை அவர்கள் வழங்குவார்கள்.

நீங்கள் அபார்ட்மெண்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டின் உள்பகுதி பற்றி மட்டும் யோசித்தால் போதும். தனி வீடாக இருப்பின் வெளிப்புறத்துக்கு வண்ணம் பூசுவது குறித்தும் திட்டமிட வேண்டியது அவசியம்.

அபார்ட்மெண்ட் வீட்டுக்கு பெயிண்ட் செய்ய, சுவர்கள் மற்றும் மேற்கூரையை அளப்பது அவசியம். அப்போதுதான் எவ்வளவு பெயிண்ட் தேவை என்பதை முடிவுசெய்ய இயலும். உதாரணத்துக்கு 15 அடி நீள, 12 அடி அகல, 10 அடி உயரம் அளவுள்ள அறைக்கு ஐந்து லிட்டர் ப்ரைமரும் ஆறு லிட்டர் பெயிண்ட்டும் தேவைப்படும்.

சுவரின் மேற்பரப்பு எப்படியான இயல்புள்ளது என்பதைப் பொறுத்தும் பெயிண்டின் அளவு, வகையும் வேறுபடும். பழைய வண்ணத்தையே மீண்டும் அடிக்க விரும்பினால், குறைவான அளவும் பெயிண்ட்தான் தேவைப்படும். பெயிண்ட் அடிக்கப்போகும் சுவரில் ஏற்கெனவே வெளிர் நிற வண்ணம் இருக்குமானால், குறைவான அளவே பெயிண்ட் தேவைப்படும். அடர்நிறச் சுவராக இருந்து, புதிய வண்ணம் பூச நீங்கள் விரும்பினால், புதிய பெயிண்டை இரண்டு கோட்டிங் கொடுக்க வேண்டும்.

அறைக்கலன்கள், கார்பெட், சுவர்ப் படங்கள் மற்றும் முக்கியமான பொருட்களை அகற்றிவிடுங்கள். வண்ணம் பூச வேண்டிய சுவரை உப்புத்தாள் கொண்டு தேய்த்து பழையதை முழுமையாக அகற்றிவிடுங்கள். மேடுபள்ளமாக இருக்கும் இடத்தை மக்குப் பசை கொண்டு சமமாக்குங்கள். சுவர்களில், விரிசலோ, தண்ணீர்வற்றோ இருந்தால் வண்ணம்பூசுவதற்கு முன்பே அதைச் சரிசெய்யுங்கள். அறையில் உதிர்ந்த வண்ணங்கள் மற்றும் தூசு தும்புகளை பெயிண்ட் செய்வதற்கு முன்பு சுத்தம் செய்துகொள்ளுங்கள். ப்ரஷ் மற்றும் ரோலர்களைச் சுத்தம் செய்வதற்கு தின்னர் திரவத்தைப் பயன்படுத்துங்கள். ப்ரஷ் உலர்ந்து போகாமல் வைத்திருக்க ஜிப் உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம். சுவர் மற்றும் மேற்கூரைகளை வண்ணம் பூசிய பின், கதவுகள் மற்றும் ஜன்னல்களில் வண்ணம் பூசலாம்.

போதுமான ஒளி இல்லாத அறைகளில் அடர்நிறங்களைப் பயன்படுத்தவே கூடாது. அது, அறையை மேலும் இருட்டாக்கிவிடும். ஒரே அறையில் இரண்டு வண்ணங்களைப்பூச நீங்கள் விரும்பினீர்கள் எனில், மேற்கூரையில் அடர்வண்ணம் பூசலாம். அடர்நிற பெயிண்டால், அறை சிறியதாகத் தோற்றம் அளிக்கும். வெளிர்நிற வண்ணங்கள், பெரிய அறை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். வண்ணம் பூசும்போது உங்கள் அறைக்கலன்களையும் பரிசீலிப்பது அவசியம். உங்கள் அறைக்கலன்களின் நிறத்துக்குப் பொருத்தமாக சுவர் நிறம் இருக்குமா என்பதையும் கவனிப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *