ஷிகர் தவான் ஆடாதது எங்கள் அணிக்கு சாதகமாகும்: ஆஷ்டன் அகர் பேட்டி | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஷிகர் தவான் ஆடாதது எங்கள் அணிக்கு சாதகமாகும்: ஆஷ்டன் அகர் பேட்டி

113

‘ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான் ஆடாதது எங்களுக்கு சாதகமாகும்’ என்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தெரிவித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா, இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று பகலில் ஆஸ்திரேலிய அணியினரும், மாலையில் இந்திய அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பீல்டிங் பயிற்சியில் கவனம் செலுத்திய இந்திய வீரர்கள் கால்பந்தும் விளையாடி மகிழ்ந்தார்கள்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஷிகர் தவான் நல்ல பார்மில் இருக்கிறார். எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஆடாதது எங்கள் அணிக்கு சாதகமாகும். இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் ஆடாததால் அக்‌ஷர் பட்டேல் தவிர இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் யாரும் கிடையாது. இடது, வலது கை ஆட்டக்காரர்கள் கொண்ட இணைக்கு எதிராக பந்து வீசுவது கடினமானதாகும். தற்போது அப்படிப்பட்ட இணை இந்திய அணியில் அமைய வாய்ப்பு இல்லாததால் நாங்கள் பந்து வீச்சு வியூகத்தை அமைப்பது எளிதாக இருக்கும்.

எங்கள் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா. இந்தியாவில் நடைபெற்ற முந்தைய சுற்றுப்பயணங்களிலும், ஐ.பி.எல். போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். பிட்ச் தன்மையை பார்த்து 2-வது சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் அதனை சரியாக பயன்படுத்தி கொள்வேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக கடினமான உழைத்து வருகிறேன்.

ஆடம் ஜம்பா, யுஸ்வேந்திர சாஹல், ஆகியோர் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடியவர்கள். அவர்கள் இந்த போட்டி தொடரில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இருவரும் அணியின் விலைமதிக்க முடியாத சொத்து. இவர்கள் பந்தை இருபுறமும் திருப்பக்கூடிய திறமைசாலிகள். இரவு நேரத்தில் அவர்களது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடுவது என்பது கடினமான விஷயமாகும். அவர்கள் தங்கள் அணிக்காக நிச்சயம் விக்கெட் வீழ்த்துவார்கள்.

இவ்வாறு ஆஷ்டன் அகர் கூறினார்.

இந்திய அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடர் முதல் ஷிகர் தவான் அபாரமாக விளையாடி வருகிறார். இலங்கை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடினார். அணியின் சமீபத்திய சாதனைகளில் முக்கிய பங்கு வகித்த ஷிகர் தவான் நல்ல பார்மில் இருந்தார். அவர் ஆடாதது அணிக்கு இழப்பு தான். இருப்பினும் அவர் இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு நமது அணியில் வெளியில் இருக்கும் சில வீரர்கள் வலுவாக இருக்கிறார்கள். அதில் ரஹானேவும் ஒருவர். அவர் வெஸ்ட்இண்டீஸ் தொடரில் சிறப்பாக ரன் சேர்த்ததுடன் தொடர்நாயகன் விருதையும் பெற்றார். ரஹானே உள்பட சில வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்தை நிரப்பும் திறமையுடன் உள்ளனர்.

இணை ஆட்டக்காரர்கள் மாற்றம் பெரிய பிரச்சினை கிடையாது. சீதோஷ்ண நிலைக்கும், ஆடுகளத்தின் தன்மைக்கும் ஏற்ப விளையாடுவது தான் முக்கியமானதாகும். மொத்தத்தில் அணி நல்ல தொடக்கம் காண வேண்டும். வீரர்கள் எந்தெந்த நிலையில் விளையாட வேண்டும் என்பதை கேப்டனும், பயிற்சியாளரும் ஏற்கனவே ஒவ்வொரு வீரரிடமும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். இதனால் அவர் தான் இந்த போட்டியிலும் தொடக்க வீரராக இறங்குவார் என்று நான் நினைக்கிறேன். நமது அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் எல்லோரும் அணியின் தேவைக்கு ஏற்ப எந்த நிலையிலும் விளையாட தயாராக இருக்கிறார்கள்.

எல்லா அணிகளுக்கு எதிராகவும் நன்றாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். இருப்பினும் வலுவான அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக நான் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாட கூடியவை. எனவே போட்டி தொடர் தொடங்கியதும் உத்வேகம் நிச்சயம் அதிகரிக்கும். இருப்பினும் தொழில்முறை வீரர்கள் என்பதால் நமக்குள்ள எல்லை வரம்பை உணர்ந்து அதனை மீறாமல் செயல்படுவோம். மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி செயல்படும் சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் இலங்கை தொடரிலும், குல்தீப் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விக்கெட் வீழ்த்தினார்கள். அவர்கள் இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்வது கடினமானதாகும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *