18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு ராஜன் செல்லப்பா எதிர்ப்பு | Maduraimani
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு ராஜன் செல்லப்பா எதிர்ப்பு

6339394265_16b50da160_b

மதுரை:

மதுரை வடக்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா. இவர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வருகிறார். திடீரென்று அவர் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரும், வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள 2 மேம்பாலங்களுக்கு எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பெயரும் சூட்டப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால் அதற்கான அரசாணை தற்போது வரை வெளியிடப்படவில்லை. அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட வேண்டும்.

மதுரை வடக்கு தொகுதியில் உள்ளாட்சி பணிகள் முற்றிலும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகளுக்குரிய போதிய நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபாநாயகர் தனபால் கட்சித்தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். அதற்கு பதிலாக அவர்களை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்திருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து.

ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கூடி இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம்.

அவ்வாறு செய்திருந்தால் அவர்களை மீண்டும் அழைத்து சமரசம் பேச வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு போதிய பலம் உள்ளது. கட்சியும், ஆட்சியும் நன்றாக செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை “சிலீப்பர் செல்” எம்.எல்.ஏ.க்கள் என யாரும் இல்லை. ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கிய 11 எம்.எல்.ஏ.க்கள் மீது அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலை வேறு. தினகரன் ஆதரவாளர்களால் ஆட்சிக்கும், கட்சிக்கும் உறுதுணையாக இருக்கின்ற கால சூழ்நிலை இல்லை. ஆனாலும் அவர்களால் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படாது.

மு.க. அழகிரி இருந்தால் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்திருப்பார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி இருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. அவர் ராஜதந்திர ரீதியாக இதனை சொல்லி இருக்கலாம்.

ஆனால் 1 கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வை அழகிரி மற்றும் வேறு யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *