February 21, 2026

“மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம்!’’ – பேரவை நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உரை

“மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம்!’’ - பேரவை நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: ‘‘உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் (16-வது பேரவை) எட்டாவது கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று (20-2-2026) முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை: “கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஐந்து நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப் பெற்று, இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது சிறப்பான விவாதம், பதிலுரை வழங்கப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியை, அடுத்த இரண்டு மாதத்தில் மீண்டும் வந்து, நிச்சயம், இன்னும் கூடுதலாக, வேகமாகத் தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களைப் போலவே எனக்கும் இருக்கிறது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும், அண்ணாவின் இன உணர்வும், மாநில சுயாட்சிக் கொள்கையும் கலைஞரின் சிறப்பான நிர்வாகமும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட திராவிட மாடல் அரசைக் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடத்திக்காட்டி இருக்கிறோம் என்ற மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன்னர் அமர்ந்த பலரும், இன்றைக்கு நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர்கள் அனைவருமே போற்றப்படக் கூடியவர்கள்தான். ஆட்சிச் சக்கரத்தை உயர்த்திப் பிடித்தது மகத்தானது. தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கால நேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு, கருணையோடு இருத்தல், கடமை தவறாமை, ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைப்பிடித்திருக்கிறேன். ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு – அந்த முடிவினால் விளையும் பயன் – பயன் பெற்றவர்களின் உயர்வு – உயர்வினால் உண்டாகும் வளம் – வளத்தினால் விளைந்திடும் இன்பம் – இன்பத்தால் கிடைத்திடும் நன்மை – இதுவே நாம் இப்போது காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்த நன்மையே மக்களுக்கு நம்பிக்கையைத் தந்து, நாளைய ஆட்சியாளர்களாக எங்களைத் தொடரச் செய்யப் போகிறது.

இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் எனும் ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளும் வல்லமையையும் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பைத் தந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

LATEST

நூற்றாண்டைக் கடந்து பெருமையோடு இயங்கி வருகிறது இந்தப் பேரவை. கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்தப் பேரவையினுடைய நூற்றாண்டு விழாவுக்கு வந்து நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்த அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும், எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். தமிழர் பண்பாட்டை மனதில்கொண்டு, ஆளுநர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 5 ஆண்டுகளில் பேரவைத் தலைவராகப் பணியாற்றும் நீங்கள் அமைதியாகவும், கண்ணியத்தோடும் அதேநேரத்தில் கட்டுப்பாட்டோடும் தங்களுடைய ஆற்றலால் இந்தப் பேரவையைச் சிறப்பாக நடத்திச் சென்றிருக்கிறீர்கள். அதற்காக என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதோடு, இந்தப் பேரவையில் பெரும்பான்மை இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர் என்கிற முறையில் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களுக்குத் துணையாக நின்று, பேரவையின் துணைத் தலைமைப் பொறுப்பை ஏற்று, அமைதியாக, சிறப்பாகப் பேரவையை நடத்தும் பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், நன்றிகள்.

இப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறக்கூடிய நேரத்தில், கருத்து மோதல்களை எதிர்கொண்டு, கட்சி வேறுபாடுகள் வெளிப்படுகையில் தன்னுடைய அனுபவத்தினாலும், அபார நினைவாற்றலாலும் அமைதிப்படுத்தக்கூடியவர், பேரவையின் மூத்த உறுப்பினர் அவை முன்னவர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். அவர் தற்போது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகள்.

பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றும் அரசு தலைமைக் கொறடா அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

மக்கள் பணியானாலும் சரி; வந்த, வருகின்ற தேர்தல் பணிகளானாலும் சரி; என்னில் ஒரு பாதியாய், இயக்கத்தின் வளர்ச்சிக்கும், ஆட்சியின் சிறப்பிற்கும் உறுதுணையாக நிற்கும் துணை முதல்வர் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், நன்றிகள்.

முக்கியமாக பல்வேறு திட்டங்களை நாங்கள் உருவாக்கினாலும், அவை சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“குறைகளைச் சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்குச் சிறகுகளைத் தரக்கூடியவர்கள்” என எண்ணிச் செயலாற்றுபவன் நான். அரசுக்குத் தக்க யோசனைகளைக் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்றைக்கு வரவில்லை. இருந்தாலும், அவருக்கும், மற்றுமுள்ள கட்சித் தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கெல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அன்போடும் பாசத்தோடும், என்றென்றும் என்னிடத்திலே உரிமையோடு அன்புகாட்டி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட மாடல் அரசால், இந்த 5 ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு, குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்துச் சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லை! இல்லவே இல்லை! ஒட்டுமொத்த தமிழர்களும் என் கையோடு கைசேர்த்து, எனக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள்.

நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உழைத்த நான், இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். எவரேனும் விடுபட்டிருந்தால், அவர்களையும் இணைத்துக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம். நன்றி! வணக்கம்!” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

Spread the love