சென்னை: ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு ஜகாத், பித்ரா கொடுப்பதற்காக முஸ்லிம்கள் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் எழுதியுள்ள கடிதம்: சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்வோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சிறு வணிகர்கள், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது ரமலான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் மார்க்க கடமையான ஜகாத், பித்ரா ஆகியவற்றை ஏழைகளுக்கு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, ரமலானின் கடைசி 5 நாட்களில் இதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்படி ஜகாத் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இதுதொடர்பாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். முஸ்லிம்கள் சார்பில் வைக்கப்படும் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

More Stories
ரூ.245.85 கோடி மதிப்பு.. திமுக அரசின் 46 திட்டங்கள்.. மொத்தமாய் ரத்துசெய்த விஜய் அரசு!
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து