சென்னை: வாக்காளர்கள் பிரிட்ஜ் வாங்க கூப்பன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியுற்ற கே.கே.செல்லப்பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்கள் தனக்கு ஆதரவாக வாக்களிக்க கூறி ரூ.10,000 மற்றும் ரூ.2,000-க்கான கூப்பன்களை விநியோகித்தார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்காளர்கள் ஃப்ரிட்ஜ் வாங்க கூப்பன்களை விநியோகித்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என் செந்தில்குமார், வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கூப்பன்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதை மனுதாரர் சுட்டிக்காட்டி பதிவு செய்தார். மேலும் வழக்கு குறித்து சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

More Stories
தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பலவீனம்: 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
ஓசூர் அத்திப்பள்ளியில் பேருந்துகள் நிறுத்தம்: தமிழக – கர்நாடகா எல்லையில் போலீசார் குவிப்பு
சட்டசபையில அப்பாவை தேடுறீங்க.. பெற்ற அப்பாவா? வளர்த்த அப்பாவா? விஜய்யை வம்புக்கு இழுத்த ஆர்.பி.உதயகுமார்!