சென்னை: “அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்கத்துடன் 46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.
ராமதாஸால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 47-ஆம் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய 3 புரட்சிகரமான தீர்மானங்களை ராமதாஸ் நிறைவேற்றச் செய்தார். ராமதாஸால் அப்போது தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம் இப்போது முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவை நமது சமூகநீதி போராட்டத்தில் எட்டப்பட்ட முதல் மைல்கல் தான். அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ கோரிக்கை
‘போதையில்லா கரூர்’ விழிப்புணர்வு மாரத்தான்: திருச்சி மத்திய மண்டல ஐஜி தொடங்கி வைத்து பங்கேற்பு
பெரம்பூர் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு