April 17, 2026

அனைத்து மாநிலங்களிலும் 50% இடங்கள் உயர்வு: தொகுதி மறுவரையறை பிரச்சினையில் மத்திய அமைச்சர் உறுதி

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் 50% எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இதனால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என உறுதி அளித்தார்.

அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்து, மசோதாக்களை அறிமுகம் செய்தார். முன்னதாக இந்த மசோதா தாக்கலுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 251 வாக்குகளும் எதிராக 185 வாக்குகளும் பதிவாகின. ஆதரவு அதிகம் இருந்ததால், மசோதாக்களை தாக்கல் செய்ய சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்கினார். இதையடுத்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களை அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய அர்ஜுன் ராம் மேக்வால், “தொகுதி மறுவரையறை மசோதா 2026-ன்படி அனைத்து மாநிலங்களுக்குமான மக்களவை இடங்கள் 50% அதிகரிக்கப்படும். இதன்மூலம், மக்களவையின் மொத்த இடங்கள் 815 ஆக அதிகரிக்கும். இதில், 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதனால், எந்த மாநிலத்துக்கும் எந்த இழப்பும் ஏற்படாது. அனைத்து மாநிலங்களும் தற்போதைய நிலையிலேயே தங்கள் பலத்தை தக்க வைத்துக்கொள்ளும்” என தெரிவித்தார்.

அமித் ஷா பேசும்போது, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மசோதாக்கள் மீதான விவாதம் குறித்து விளக்கிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெறும். விவாதத்தின் நேரத்தை நீட்டிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்க வேண்டும். இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறும்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஒம் பிர்லா, “இந்த மூன்று மசோதாக்கள் மீதான விவாதம் 15 முதல் 18 மணி நேரம் வரை நடைபெறும். இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்” என தெரிவித்தார்.

மசோதாக்கள் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் நீங்கள் மீண்டும் மீண்டும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். 2023-ம் ஆண்டில் நீங்கள் எங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் 2024-ம் ஆண்டிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்கலாம். பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தை தொகுதி மறுவரையறையோடு இணைக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இதை நீங்கள் ஏற்றால், நிச்சயமாக நாங்கள் ஆதரவு அளிப்போம். இந்த மசோதா பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கானது அல்ல. மாறாக இது மறைமுக வழியாக தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதற்கானதாகும்” என குற்றம் சாட்டினார்.

Spread the love