March 3, 2026

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்

எம்.எல்.ஏ மகாராஜன் திறந்து வைத்தார்…. 

ஆண்டிபட்டி, மார்ச். 3,

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி வகுப்பறை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர்‌ மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

சண்முகசுந்தரபுரம் ஊராட்சியை சேர்ந்த முத்துசங்கிலிபட்டி கிராமத்தில், மாணவர்களின் கல்வி நலன் கருதி ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதனை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்துவிளக்கேற்றி வகுப்பறையை  பார்வையிட்டார்.

அதேபோல், சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் நீண்ட நாட்களாக சிதிலமடைந்த நிலையில் இருந்த பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய அலுவலகத்தையும் எம்.எல்.ஏ மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் திமுக பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட துணை அமைப்பாளர் ராஜா, கிளைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட வர்த்தக அணி அய்யணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் மற்றும் சுப்புராஜ் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Spread the love