சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டரும் சென்னையில் தினமும் 16 லட்சம் லிட்டருக்கு அதிகமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழைகள், குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியது கவலை அளிக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆவின் பால் கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு அதன் கொள்முதல் விலை உயர்த்தப்படாததே காரணம்.
பசும்பால் லிட்டருக்கு ரூ.35, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.44 என்ற ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின் நிறுவனமும் கொள்முதல் விலையை உயர்த்தாமல் பால் கொள்முதலை அதிகரிக்க முடியாது.
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
கனிமங்கள் கொண்டு செல்ல தமிழக அரசின் தடைக்கு எதிரான மனு: தலைமை நீதிபதிக்கு அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
“இடம் மாறியது பரவாயில்லை; அதற்காக துதிபாட அவசியமில்லை” – ஓபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் பதிலடி
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்!