October 27, 2026

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை முதல் அமல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை: ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட 67 ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் 175க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இவை விற்பனை செய்யப்படுகின்றன. சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுகின்றன.  தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பொருள்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மூலப்பொருள்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில், ஆவின் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து 500 மி.லி. ஆவின் நெய் ரூ. 365-ல் இருந்து ரூ.400 ஆகவும் 500 மி.லி. தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும் 250 கிராம் ஆவின் மைசூர்பா ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக விளங்கும் ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love