‘பொருளாதார பலத்தில் அமெரிக்காவை முந்தியது இந்தியா’
புதுடெல்லி: பொருளாதார பலத்தில் அமெரிக்காவை இந்தியா முந்தியிருக்கிறது என்று தொழிலதிபர் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தொடர்பாக சர்வதேச செலாவணி நிதியத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து “வோர்ல்ட் ஆப் ஸ்டாஸ்டிக்ஸ்” என்ற அமைப்பு அண்மையில் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதன்படி 26.6 ஜிடிபி உடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 17 சதவீத ஜிடிபியுடன் இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது. 9.9 சதவீத ஜிடிபியுடன் அமெரிக்கா 3-வது இடத்தில் உள்ளது. இந்தோனேசியா 3.8%, துருக்கி 2.2%, நைஜீரியா 1.5%, வியட்நாம் 1.6 சதவீத ஜிடிபியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இது தொடர்பாக எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அதிகார பலம் இடம் மாறுகிறது” என்று தெரிவித்துள்ளார். பொருளாதார பலத்தில் அமெரிக்காவை சீனாவும் இந்தியாவும் முந்தியுள்ளன என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். இந்த சூழலில் மத்திய பட்ஜெட் தொடர்பாக மாணவ, மாணவியருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.
அப்போது அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் சமூக வலைதள பதிவை அவர் சுட்டிக் காட்டி பேசியதாவது: இந்தியாவின் பொருளாதார பலம் என்ன என்பதை எலான் மஸ்கின் பதிவு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுவே ஆதாரம். இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.
26 சதவீத ஜிடிபியுடன் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி 17 சதவீதமாக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி சற்று அதிகமாகவே உள்ளது. எனினும் இந்த இடைவெளி நிச்சயமாக சமன் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிரண் ரிஜிஜு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டினரின் கருத்துகளை நான் மேற்கோள் காட்டுவது கிடையாது. ஆனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்காக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வெளியிட்ட ஜிடிபி புள்ளி விவரத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜனநாயக நாட்டில் அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இந்தியாவின் புகழை கெடுக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதை ஏற்க முடியாது. இந்தியராக இருப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!
“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” – ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்
மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம் பிப்.16-ல் திறப்பு