
புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம். முதலீடு, புதுமை கண்டுபிடிப்பில் தனியார் துறை கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்க தொடர் நேற்று தொடங்கியது. “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுகங்களின் கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. மேலும் பட்ஜெட்டில் டிஜிட்டல் கட்டமைப்பு, எரிசக்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.
தொழில் தொடங்க ஏதுவாக சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம். முதலீடு, புதுமை கண்டுபிடிப்பில் தனியார் துறை கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலக நாடுகளுடன் தனியார் நிறுவனங்கள் போட்டியிட வேண்டும்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்குகள் மிகவும் முக்கியமானவை. இந்த அமர்வுகள் வெறுமனே கருத்துப் பரிமாற்றம் என்ற அளவோடு நின்று விடாமல், பயனுள்ள சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். பட்ஜெட்டை அமல்படுத்தும்போது ஏற்படும் நடைமுறை சவால்கள் குறித்து கருத்தரங்கில் கருத்துகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பொருளாதார கொள்கைகள், திட்டங்களை மேம்படுத்த முடியும். பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

More Stories
3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க அசாம் முதல்வரின் புதிய முயற்சி!
வானில் இன்று 6 கோள்களின் அணிவகுப்பு – இந்தியாவில் எப்போது காணலாம்?
பிரதமர் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதி!