August 5, 2026

இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்

புதுடெல்லி: ‘மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இளைஞர்களை சமாதானப்படுத்த ரீல்ஸ் போதாது. அவர்களுக்குத் தேவை வேலை’ என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், மிகப் பெரிய உள்நாட்டு நிறுவனங்கள் பலவும் முன்பைவிட மிகக் குறைந்த அளவிலேயே பணியாட்களை வேலையில் அமர்த்துகிறது என்ற செய்தியைப் பகிர்ந்து இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதனை சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த ஒரு விஷயம் உண்மையென்பது நிரூபணமாகியுள்ளது. மோடி அரசு, இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் இந்திய இளைஞர்கள் மீது விடிகிறது. கடந்த ஓராண்டில் நாட்டின் 11 முன்னணி நிறுவனங்களில் 9-ல் 27% வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இது தேசம் மிகவும் தீவிரமான வேலைவாய்ப்புச் சிக்கலில் தவிப்பதையே காட்டுகிறது.

இருந்தாலும் தீர்வுகளை நோக்கி நகர்வதை விடுத்து, இந்த அரசு பிடிவாதமாக அப்படியொரு பிரச்சினை இருப்பதையே மறுத்துக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பின்மை குறித்த இந்தச் செய்தி பெரிய பிரச்சினையின் ஒரு நுணி மட்டும்தான். பெரிய நிறுவனங்களிலேயே இந்த நிலை என்றால் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையில் வேலைவாய்புப் பிரச்சினையைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், அவைதான் மோடி அரசின் மோசமாக பொருளாதாரக் கொள்கைகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அரசின் தவறான பொருளாதார, வேலைவாய்ப்புக் கொள்கைகள் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையை ஆழமான பிரச்சினைக்குள் தள்ளியுள்ளது.

வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை தீர்ப்பதை விடுத்து மோடி அரசு தலைப்புச் செய்தியை தனக்கு சாதகமாக நிர்ணயிப்பதை செய்து கொண்டிருக்கிறது. இன்னும் திசைதிருப்பும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

நாட்டின் இளைஞர்கள் விவேகமுள்ளவர்கள். அவர்களை திருப்திப்படுத்த வெறும் ரீல்ஸ்களை உருவாக்குவது மட்டும் போதாது – அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி சிஜேபி போராட்டத்தின்போது, நாட்டின் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி செல்ஃபி வீடியோ வழியில் போராட்டத்தைக் கைவிட கோரிக்கை வைத்திருந்தார். மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஜென்ஸீ இளைஞர்கள் பாணியில் பேசுவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘நாட்டின் இளைஞர்கள் விவேகமுள்ளவர்கள். அவர்களை திருப்திப்படுத்த வெறும் ரீல்ஸ்களை உருவாக்குவது மட்டும் போதாது – அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Spread the love