சென்னை: இந்திய சந்தையில் ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 18 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இந்த புது வகை ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 9-ம் தேதி அன்று ஐபோன் 18 புரோ மற்றும் ஐபோன் 18 புரோ மேக்ஸ் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதோடு முதல் ஃபோல்டபிள் போனான ஐபோன் Duo-வை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 18 மற்றும் ஐபோன் ஏர் 2 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்யவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நகர்வு அதன் பயனர்களுக்கு சற்று சர்ப்ரைஸ் கொடுத்தது.
வழக்கமாக ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் சந்தையில் அறிமுகமானால் அதற்கு முந்தைய மாடல் ஐபோன்களின் விலை சற்று குறையும். அதை கருத்தில் கொண்டு முந்தைய மாடல் ஐபோன்களை ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் வாங்குவது உண்டு. ஆனால், இந்த முறை அதற்கு நேர் எதிரான நடவடிக்கையை ஆப்பிள் முன்னெடுத்துள்ளது. புதிய மாடல் ஐபோன்கள் இந்திய சந்தையில் அறிமுகமான உடன் முந்தைய ஐபோன்களின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் முந்தைய ஐபோன்களின் விலை உயர்வு
இந்திய சந்தையில் முந்தைய ஐபோன்களின் விலை 10 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. புதிய போன்களின் வரவு காரணமாக ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஐபோன் 17 கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகமானது. 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை இப்போது இந்தியாவில் ரூ.99,900. முன்னதாக, இந்த போன் ரூ.82,900-க்கு விற்பனையானது. ரூ.17,000 விலை உயர்ந்து இந்த போன் இந்தியாவில் விற்பனை ஆகிறது.
ஐபோன் ஏர் மாடல் போன் (256ஜிபி ஸ்டோரேஜ்) இப்போது 1,49,900-க்கு இந்தியாவில் விற்பனை ஆகிறது. முன்னதாக, இந்த போன் ரூ.1,19,900-க்கு இந்தியாவில் விற்பனையானது.
ஐபோன் 17e போனும் ரூ.79,900-க்கு விற்பனை ஆகிறது. முன்னதாக, இதன் விலை ரூ.64,900 என இருந்தது. ஐபோன் 16 போனின் விலையும் உயர்ந்துள்ளது.
இதே போல புதிதாக அறிமுகமாகி உள்ள ஐபோன் 18 புரோ, ஐபோன் 18 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் Duo மாடல் போன்களின் விலை அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ரூ.50,808 முதல் ரூ.1,09,683 வரை விலை கூடுதலாக உள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பாகங்கள் மற்றும் மெமரி சிப்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட விலை உயர்வு காரணமாக ஐபோன்களின் விலை உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப துறையில் ஏஐ மற்றும் டேட்டா சென்டர்கள் காரணமாக மெமரி சிப்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதை சமாளிக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சாதனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. ஆப்பிள் நிறுவனமும் கடந்த ஜூன் மாதம் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்திருந்த சூழலில் ஐபோன்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளது.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உள்நாட்டு வரிகள் காரணமாக ஐபோன் விலை உயர்ந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

More Stories
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.1,920 குறைவு
இந்தியாவுக்கு 105 பயணிகள் விமானங்கள்: ரஷ்ய அரசின் யுனைடெட் ஏர்கிராப்ட் நிறுவனம் அறிவிப்பு
தெற்கு ரயில்வேயில் 100% மின்மயமாக்கல் பணி நிறைவு: புதிய மைல்கல்லை எட்டி சாதனை