வாஷிங்டன்: உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய வளங்கள் ஆகும்.
எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அதிகமான வரியை விதித்து வருகிறார்.
அந்த வகையில், ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது 100% கூடுதல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நடைமுறைசார் வாக்கெடுப்பு என்ற முறையில் நேற்று முன்தினம் நிறைவேறியுள்ளது.
இந்த மசோதா தற்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த மசோதா அமெரிக்காவில் சட்டமாக வேண்டும் என்றால் பல்வேறு கட்டங்களை தாண்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.
தற்போது செனட் சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடக்கும். இந்த 2 சபைகளிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற வேண்டும். அதன் பின்னர்தான் இந்த மசோதா அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஒப்புதலுக்கு செல்லும். இதைத் தொடர்ந்து அவர் அனுமதி வழங்கும்பட்சத்தில் வரி விதிப்பு தொடங்கும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் கடும் பாதிப்பைச் சந்திக்கும் எனத் தெரிகிறது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100% வரி விதிக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

More Stories
அமெரிக்காவின் முக்கிய முடிவு: உலக முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு
“வரி விதிக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கும் வகையில் மசோதாவை திருத்த வேண்டும்” – ட்ரம்ப்
ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்கா பதிலடி