சென்னை: மாநிலத்தில் உள்ள அனைத்து இறால் பண்ணைகள், கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் அபாயகரமான வேதித் தொழிற்சாலைகளைத் தமிழக அரசு உடனடியாக அவசர ஆய்வுக்கு உட்படுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில், ஜூன் 21-ம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு காரணமாக 7-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் உணவுகளை பதப்படுத்தத் தேவையான பனிக்கட்டிகளைத் தயாரிக்கஅமோனியா குளிர்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
திரவ நிலையில் சேமிக்கப்படும் அமோனியாவை மைனஸ் 33.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும். இதற்காகத் தொடர்ச்சியான குளிர்பதனச் சுழற்சி முறையும், சென்சார்களுடன் கூடிய மூன்றடுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பும் கட்டாயம் இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் படி, இந்த அமைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது விபத்து நடந்த தொழிற்சாலையில் இத்தகைய எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எண்ணூர் கோரமண்டல் உர ஆலை விபத்து, தொடர்ச்சியான பட்டாசு ஆலை விபத்துகள் போன்றவை அரசு கண்காணிப்பு அமைப்புகளின் பலவீனத்தையே காட்டுகின்றன. எனவே கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
தொழிற்சாலைக் கண்காணிப்புக் குழுக்களில் அரசு அதிகாரிகளுடன் சேர்த்து, உள்ளூர் மக்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் துறைசார் வல்லுநர்களைப் பிரதிநிதிகளாக இணைக்க வேண்டும்.
பாதுகாப்புத் தணிக்கை ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக, 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும். விதிமீறல் இல்லை என்பதற்கான சான்றிதழை அரசுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் குழுவும் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள இறால் பண்ணைகள் மற்றும் வேதித் தொழிற்சாலைகளில் உடனடியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும். தொழிற்சங்கங்களுடன் இணைந்து வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காகப் பிரத்யேகமான கொள்கைத் திட்டங்களை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளியிட பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரன வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
எரிசக்தி துறையில் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்
திமுக தயவால் தான் தவெக ஆட்சி நடக்குது: முதல்வர் விஜய் சொன்ன அந்த வார்த்தை – அதிர்ந்த சட்டசபை..