வாஷிங்டன்: “ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அமெரிக்காவுடன் ஓர் உடன்படிக்கையை எட்டாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்” என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அதைத் தடுக்கும் முயற்சியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஈரானின் ஃபர்டோ, நடான்ஸ், இஸ்பாஹன் ஆகிய அணுஆயுத தளங்களைக் குறிவைத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹம்மர்’ எனப் பெயரிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை நடத்தின. இதற்கு ‘ஆபரேஷன் எபிக் ஃப்யரி’ என பெயரிடப்பட்டது. இந்த தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் பல மாதங்களுக்கு நீடித்தது.
இந்நிலையில், ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அமெரிக்காவுடன் ஓர் உடன்படிக்கையை எட்டாவிட்டால் ஈரானுக்கு எதிராக சிறிய அளவிலான எபிக் ஃப்யூரி தாக்குதல் நடத்தப்படலாம் என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ட்ரம்ப், “நாங்கள் மீண்டும் ஒரு சிறிய எபிக் ஃப்யூரி தாக்குதலை நடத்தலாம். அல்லது அவர்கள் உடன்படிக்கைக்கு வரலாம். அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், வாருங்கள் பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்று கூறுவார்கள்.
இதற்கு முன் நாங்கள் ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் மிட்நைட் ஹம்மர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். அதன்மூலம், ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் திறனை முற்றிலுமாக அழித்தோம். அவர்களை ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற வழிகளிலும் தோற்கடித்தோம். இப்போது அந்த இலக்கை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்தலாம் என்று துருக்கிக்கான அமெரிக்க தூதர் மரியோ நவ்ஃபால் கூறி இருந்த நிலையில், ட்ரம்ப் இதை தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, புளோரிடாவில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ இது முடிவுக்கு வரும் என்று நான் கருதுகிறேன். ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுப்பதே அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் பிரதான நோக்கமாக உள்ளது. நான் ஈரானை தாக்கி இருக்காவிட்டால் அவர்களிடம் அணு ஆயுதம் இருந்திருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், நெருப்புடன் விளையாட வேண்டாம் என கூறியுள்ளது. “ஈரான் தாக்கப்பட்டால், கடலின் அடியில் உள்ள கேபிள்கள் முதல் ராணுவ தளங்கள் வரை அனைத்தையும் நாங்கள் தாக்குவோம். சிவப்புக் கோடுகள் என்று இனி எங்களுக்கு எதுவும் இருக்காது. சாத்தியமான அனைத்து வழி தாக்குதல்களையும் நாங்கள் மேற்கொள்வோம்.” என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

More Stories
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7,000: ஈரான் எல்லை மூடப்பட்டு உள்ளதால் விநியோகம் கடும் பாதிப்பு
“இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” – ட்ரம்ப்
மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை ரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு