
சென்னை: என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 442 கோடி ரூபாய் முறைகேடு குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில், 442 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.
எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், சாம்பல் விற்பனை, ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, காலாவதியான டெண்டர்களின் காலத்தை நீட்டித்தது; 73,000 டன் அளவுக்கு செம்மண்ணை சட்டவிரோதமாக அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் என்.எல்.சி. அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தனது புகார் தொடர்பான முழு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகவில்லை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Read More
இதையடுத்து, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லாமல், நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, என்.எல்.சி. உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகாருக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, சிபிஐ விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பித்து, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

More Stories
“எங்களுடைய சாதனைகளை, அடுத்த ஆட்சியில் நாங்களே முறியடிப்போம்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
ரேஷன் கார்டு பிரச்சனையா? சென்னையில் மெகா முகாம்: 10 முக்கியத் தகவல்கள்!
முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்