வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் நிரந்தர சிஇஓ பதவிக்கான போட்டியில் 3 இந்திய வம்சாவளியினர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங், ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், என்விடியா நிறுவனத்தின் நிரந்தர சிஇஓ பதவிக்கு அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சஞ்சய் மெஹ்ரோத்ரா, நிகேஷ் அரோரா மற்றும் தாமஸ் குரியன் ஆகிய 3 இந்திய வம்சாவளியினர் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் மெஹ்ரோத்ரா
மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரானின் தலைமை நிர்வாகியான சஞ்சய் மெஹ்ரோத்ரா, இத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மைக்ரான் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் என்விடியா நிறுவனத்துடன் இவர் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார். 2017-ல் மைக்ரானில் சேருவதற்கு முன்பு, மெஹ்ரோத்ரா 1988-ல் ஃபிளாஷ் மெமரி முன்னோடியான சான்டிஸ்க் நிறுவனத்தை இணைந்து நிறுவினார்.
நிகேஷ் அரோரா
பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிகேஷ் அரோரா. கூகுள் நிறுவனத்தில் 10 ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார்.
தாமஸ் குரியன்
கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரியான தாமஸ் குரியன், கூகுளில், கிளவுட் உள்கட்டமைப்பு, நிறுவன மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை மேற்பார்வையிடுகிறார். மேலும் 8 பேர் பரிசீலனையில் உள்ளனர்.
ரூ.47 லட்சம் கோடி இழப்பு
என்விடியா பங்குகள் வரலாறு காணாத அளவில் சரிவை கண்டுள்ளது. ஜென்சென் விவகாரம் கிளம்பியது முதல் நேற்று வரை அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 490 பில்லியன் டாலர் (சுமார் ரூ.47 லட்சம் கோடி) சரிந்துள்ளது. இதனால் அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

More Stories
என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ராஜினாமா – துணைத் தலைவர் கிம்பர்லி பாவல் உடனும் தொடர்பில் இருந்ததாக தகவல்
பெல்ஜியத்தில் பள்ளம் வெட்டியபோது ரூ.99 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுப்பு
இழப்பீட்டு தொகை தராததால் ஆத்திரம்: சீன அரசு அலுவலகத்தை பொக்லைன் மூலம் இடித்தவர் கைது