August 19, 2026

“எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம்” – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: “எளிய பின்னணியைக் கொண்டவர்களை மக்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். மேலும், எம்எல்ஏக்கள் தங்களுக்கென்று ஓர் உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்” என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று அறிவித்தார்.

விசிக எம்எல்ஏவின் கோரிக்கை:

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 12-ம் தேதி பேசிய விசிக எம்எல்ஏ ஜோதிமணி, “பொருளாதார வசதி இல்லாததால் என்னிடம் கார் இல்லை. அதனால் என்னுடைய தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. வாடகைக்கு வாகனம் எடுத்தே செல்ல வேண்டியதாக உள்ளது. என்னைப்போல பல சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கின்றது. அரசு இதனை கவனத்தில் கொண்டு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும்” என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், “முதல்வரின் கரங்கள் கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வானவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (ஆக.19) கூடியதும், விசிக எம்எல்ஏ ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று, “எளிய பின்னணியைக் கொண்டவர்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். எம்எல்ஏக்கள் தங்களுக்கு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் ” என்று முதல்வர் விஜய் அறிவித்தார். விதி எண் 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை விசிக எம்எல்ஏ ஜோதிமணி உள்பட உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர். பாமகவும் வரவேற்பு தெரிவித்தது. அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், முதல்வரின் இந்த அறிவிப்பால் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

Spread the love