March 24, 2026

‘ஏஐ’யால் வழக்கறிஞராக முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

பெங்களூரு: உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் சார்பில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று தேசிய மாநாடு நடைபெற்றது.

இதில் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது: “செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தால் நீதித் துறையின் சேவைகள், திறன்களை மேம்படுத்த உதவ முடியும்.

ஆனால் ஏஐ, வழக்கறிஞராகவோ, நீதிபதியாகவோ செயல்பட முடியாது. ஒரு வழக்கில் 10 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் சூழ்நிலைகளின் அடிப்படையில் 9 பேருக்கு ஜாமீன் வழங்கி, ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியும்.

ஆனால் ஏஐ தொழில் நுட்பம் இவ்வாறு செயல்படாது. இந்த தொழில் நுட்பத்தால் வழக்கறிஞராகவும் செயல்பட முடியாது. இவ்வாறு நீதிபதி விக்ரம் நாத் பேசினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் பேசும்போது, “நான் வழக்கறிஞராக இருந்தபோது ஆரோக்கியமாக இருந்தேன். ஆனால் நீதிபதியாக பதவியேற்ற பிறகு எனது உடல் நலன் பாதிக்கப்பட்டது.

பணி தொடர்பான மன அழுத்தம் காரணமாக பெரும்பாலான நீதிபதிகள் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப் படுகின்றனர்.

எங்களது பணி சூழல் குறித்து சிலருக்கு மட்டுமே நன்றாக தெரியும். கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது” என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசும்போது, “பல்வேறு மாநிலங்களில் நீதித் துறைக்கான ஒதுக்கீடு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதனால் நீதித் துறையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒரு நீதிபதியின் பணி காலை 10 மணி முதல் மாலை 5 மணியோடு நிறைவடைந்து விடாது. அவர் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார். இதை அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Spread the love