July 17, 2026

ஒரு உள்ளாட்சி எல்லையில் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி மயானத்தை பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஒரு உள்ளாட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அடக்கம், தகனம் செய்யும் இடத்தில் உடல்களை அடக்கமோ, தகனமோ செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”பொம்மைய கவுண்டன்பட்டியில் இறப்பவர்களின் உடல்களை சுக்குவாடன்பட்டி தகன மேடையில் தகனம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கண்ணியம் மற்றும் நியாயமான நடத்தையைப் பெறுவதற்கான உரிமை என்பது உயிருடன் இருக்கும் ஒருவருக்கானது மட்டும் அல்லாமல் அவர் இறந்த பிறகு அவரது உடலுக்கும் அந்த உரிமை உண்டு. உடலைத் தகனம் செய்யும் இடத்திற்கோ அல்லது அடக்கம் செய்யும் இடத்திற்கோ எடுத்துச் செல்வது உள்ளிட்ட சடங்குகள் மற்றும் நிகழ்வுகள் மதத்தின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

எனவே மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அவற்றை தடை செய்ய முடியாது. மனுதாரர்கள் தேனி மாவட்டம் அல்லி நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மைய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தில் இறப்பவர்களின் உடல் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுக்குவாடன்பட்டியில் அமைந்துள்ள சுடுகாட்டில் தகனம் செய்து வருகின்றனர். இதற்கு சுக்குவாடன்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மனுதாரர் தரப்பில் பொம்மய்ய கவுண்டன்பட்டி அருகிலேயே சுக்குவாடன்பட்டி சுடுகாடு இருப்பதால் அதை பயன்படுத்துவது மிகவும் வசதியானது எனக் கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டபோது சுக்கு வாடன்பட்டி கிராம மக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் மனுதாரர்கள் நீதிமன்றம் வந்துள்ளனர். சுக்குவாடன்பட்டி கிராம மக்கள் ஒரு நிலத்தை வாங்கி தகன மேடை அமைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த தகன மேடை ஊஞ்சாம்பட்டி கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தகன மேடை அல்லது அடக் கஸ்தலம் அமைப்பது கிராம ஊராட்சியின் கடமையாகும். ஒரு உள்ளாட்சி அமைப்பு தனது பகுதி குடியிருப்பாளர்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். ஊராட்சிகளின் வறையறுக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான செயல்பாடுகளில் அப்பகுதியை சாராதவர்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

பஞ்சாயத்துகள் சட்டப்படி தகன மற்றும் அடக்கம் செய்யும் இடங்கள் புறம்போக்கு நிலங்கள் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், அவற்றின் பயன்பாட்டை முறைப்படுத்தும் அதிகாரம் கிராம ஊராட்சிக்கு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. தகன மேடை உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, ​​அந்த இடத்தைப் பயன்படுத்த தகன மேடையின் பொறுப்பாளரின் அனுமதி தேவை.

குறிப்பிட்ட மதப் பிரிவினருக்குச் சொந்தமான அடக்கம் மற்றும் தகன இடங்கள் அந்தப் பிரிவினரின் பயன்பாட்டிற்கு மட்டுமே உரியதாக இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கான தகன மேடை அனைத்து சாதியினரின் பயன்பாட்டிற்கும் திறந்திருக்க வேண்டும். பிறப்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்தவொரு பாகுபாடும் அரசியலமைப்புக்கு முரணானதும். அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவக் கொள்கையை மீறுவதும் ஆகும். அதே நேரத்தில் இறந்த நபர் உள்ளூரைச் சேர்ந்தவர் அல்ல, உள்ளூரில் இறக்கவில்லை என்று கூறி தகன மேடையை பயன்படுத்த அதன் பொறுப்பாளர் மறுத்தால் சட்ட மீறல் ஆகாது.

தேனி- அல்லிநகரம் நகராட்சியில் எரிவாயு மூலம் இயங்கும் தகன மேடை உள்ளது. பொம்மைய கவுண்டன்பட்டி வாசிகள் தேனி- அல்லிநகரம் நகராட்சி தகன மேடையை மட்டுமே பயன்படுத்த சட்டப்படி உரிமை கொண்டுள்ளனர். வேறொரு உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அந்த ஊராட்சியில் வசிக்காத ஒருவர் சடலத்தைப் புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ உரிமையுள்ளது என்பதற்கு எந்த சட்ட விதியும் தாக்கல் செய்யப்படவில்லை.

எனவே ஒரு உள்ளாட்சி அமைப்பின் எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அடக்கம், தகனம் செய்யும் இடத்தில் உடல்களை அடக்கமோ, தகனமோ செய்ய முடியாது. அதன் அடிப்படையில் மனுதாரர்கள் சுக்கு வடன்பட்டி கிராமத்தின் தகன மேடையில் தகனம் செய்வதற்கான உரிமையைக் கோர முடியாது. இந்த உத்தரவு இரு கிராமங்களுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் என நம்புகிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Spread the love