மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் – கர்நாடகா இடையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. இந்த விவகாரத்தில் இன்றைய தினம் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ள நிலையில், ஓசூர் எல்லையில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர் வாட்டாள் நாகராஜ். குறிப்பாக காவிரி நதிநீர் விஷயத்தை சொல்ல்லாம். காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக மேலாண்மை ஆணையம், ஒழுங்குமுறை குழு, தீர்ப்பாயம், நடுவர் மன்றம் எனப் பல இருந்தாலும் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு தேவையான பங்கை திறந்துவிட கர்நாடகா அரசு ஏமாற்றம் அளித்து வருகிறது. பருவமழை பொழித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் இருதரப்பிலும் போராட்டங்கள் வெடிக்கும். அதிலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட தொடங்கியதில் இருந்து விஷயம் வேறொரு தளத்திற்கு நகர்ந்துள்ளது.
விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது அணை விவகாரம்
இதுதொடர்பாக நீதிமன்றத்தின் கதவுகளையும் தமிழக அரசு தட்டியிருக்கிறது. ஆனாலும் கர்நாடகா அரசு கைவிட்ட மாதிரி தெரியவில்லை. இந்நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று நண்பகல் 12 மணியளவில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கர்நாடகாவிற்குள் சென்றால் கன்னட அமைப்புகளால் தாக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்
இந்த சூழலில் தமிழக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் ஐஏஎஸ் உத்தரவின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு கர்நாடகா சென்ற தமிழக பேருந்துகளும் திரும்பி வந்துவிட்டன. இந்த சூழலில் கர்நாடகாவை சேர்ந்த சில பேருந்துகள் மட்டுமே ஓசூர் வரை இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏறுவதற்கு முண்டியடித்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் சிரமத்தில் தவித்து வருகின்றனர்.
கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் – எல்லையில் பதற்றம்
- தமிழகத்தில் இருந்து பெங்களூருவிற்கு நாள்தோறும் 300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- மறுமார்க்கத்தில் கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு சுமார் 80 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- இருதரப்பிலும் ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வந்த பின்னரே, பேருந்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- எப்படியும் இன்று மாலை வரை சிரமங்கள் நீடிக்கும் என்கின்றனர். அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் கர்நாடகா மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பிலும் ஆர்ப்பாட்டம்
நண்பகல் 12 மணிக்கு போராட்டம் தொடங்கவுள்ள நிலையில், இன்னும் ஒரு மணி நேரத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிவிடும் என்கின்றனர். குறைந்தது 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஓசூர் ஜூஜூவாடி எல்லையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதனால் பெங்களூரு செல்லும் தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

More Stories
தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பலவீனம்: 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
‘ஃப்ரிட்ஜ் வாங்க கூப்பன்’ – சி.விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சட்டசபையில அப்பாவை தேடுறீங்க.. பெற்ற அப்பாவா? வளர்த்த அப்பாவா? விஜய்யை வம்புக்கு இழுத்த ஆர்.பி.உதயகுமார்!