இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அணியின் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய விவகாரத்தில் இடைநீக்கம் மற்றும் அபராதம் எதிர்நோக்கி வரும் நிலையில், தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் அணி விதித்திருந்த இரவு நேர கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நைட் கிளப்பில் இருவரும் ரக்பி வீரர் டொடோவா அவ்வா என்ற வீரருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அணியின் ஒழுக்கம் மற்றும் நிர்வாகம் மீதான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து ஈசிபி மற்றும் கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றன. அணி விதிகளை மீறியதற்காக ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சனுக்கு தண்டனை வழங்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அபராதம் மற்றும் சில போட்டிகளுக்கான இடைநீக்கம் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், 15 ஆண்டுகளாக நீடித்து வரும் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஸ்டோக்ஸ் தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவசர நிர்வாகக் குழுக் கூட்டத்தை ஈசிபி செவ்வாய்க்கிழமை நடத்தியதாக கூறப்படுகிறது.
தனது நீண்டகால முகவரும் முன்னாள் இங்கிலாந்து வீரருமான நீல் ஃபேர்பிரதர் உடன் ஸ்டோக்ஸ் புதன்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். அந்த சந்திப்பில் அவர் முழுமையான ஓய்வு, கேப்டன் பதவியிலிருந்து விலகுதல் அல்லது கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பது உள்ளிட்ட விருப்பங்களை பரிசீலிக்கலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 17ஆம் தேதி கியா ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாகவே அணிக்கான புதிய வீரர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவம் தனது அணித்தோழர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து ஸ்டோக்ஸ் கவலைப்படுவதாகவும், தாமதமாக வெளியில் இருந்தது தவறு என்பதை உணர்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இந்த விவகாரத்தை கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் குறித்தும் அவர் முழுமையாக திருப்தியடையவில்லை என கூறப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது கேப்டனாக தொடர்வாரா என்பது குறித்து அடுத்த சில நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

More Stories
ரோஹித், பாண்டியா ஒருநாள் தொடருக்கு தயார்
குரூப் ‘கே’ – போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா அணிகள் எப்படி? | FIFA WC 2026
குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026