கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த இரண்டு வெவ்வேறு படகுகள் கடலில் மூழ்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அகதிகள் முகமை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச இடப்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் முகமை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “போரினால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களும், வங்கதேசத்தின் காக்ஸ் பசாரில் உள்ள நெரிசல் மிகுந்த அகதிகள் முகாமில் நீண்டகாலமாக வசித்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்களில் சிலரும் பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி கடந்த ஜூன் கடைசி வாரத்தில் இரண்டு படகுகள் மூலம் புறப்பட்டுள்ளனர்.
பலவீனமான மரப்படகுகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சென்ற அவர்களின் படகுகள் அடுத்தடுத்து மூழ்கியுள்ளன. 250 பேருடன் சென்ற முதல் படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்துள்ளது. சுமார் 280 பேருடன் புறப்பட்ட இரண்டாவது படகு கடந்த 8-ம் தேதி மியான்மரின் அயேயார்வாடி கடற்கரைக்கு அப்பால் மூழ்கி இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகுகள் மூழ்கியது குறித்தும், உயிரிழப்பு குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும், இந்த துயரமான சம்பவம் குறித்து சர்வதேச இடப்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் முகமை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. கடல் சூழல் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் காலத்தில் இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே மரப்படகுகள் மூலம் தங்கள் உயிரை பணயம் வைத்து மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் ரோஹிங்கியா அகதிகள் சுமார் 300 பேர் காணாமல் போயினர் அல்லது உயிரிழந்தனர் என்றும் சர்வதேச இடப்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

More Stories
ஈரான் போர் தொடங்கியதற்கு மிக முக்கிய காரணம் இஸ்ரேல்: அமெரிக்க துணை அதிபர்
இந்தியர்களின் சட்டவிரோத அமெரிக்க குடியேற்றம்.. 69% அதிரடி சரிவு.. ட்ரம்ப் காரணமா?
ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ஈரான்… மிரட்டும் ட்ரம்ப்!