மதுரை: கரூர் கோயில் நிலம் பத்திரப் பதிவு தடை நீக்கத்துக்கு எதிரான வழக்கில், கோயில் நிலங்கள் யார் பெயர்களில் உள்ளன, நிலத்தின் மொத்த மதிப்பு என்ன என்பது போன்ற விவரங்களை தமிழக அரசு மற்றும் கருர் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு: கரூர் மாவட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கான, 15 கிராமங்களில் உள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களை பதிவு செய்ய பதிவுத் துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலங்களை ஆக்கிரமித்திருந்த சுமார் 3,390 நபர்கள் அளித்திருந்த மனுக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர், பதிவுத் துறை விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது முன் அனுமதி பெறாமல் கோயில் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்கிறது. அது செல்லத்தக்கது அல்ல. எனவே, பதிவுக்கான தடையை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகிய மூவரும் ஒரே நாளில் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர்’ எனக் கூறப்பட்டது.
அரசுத் தரப்பில், ‘80-ம் நூற்றாண்டுகளில் சில இனாம் நிலங்கள் கோயில்களுக்கு வழங்கப்பட்டன. 1965, 67-ஆம் ஆண்டுகளில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டு, பலருக்கு மாற்றியும் விற்பனை செய்யபட்டது. இது தொடர்பாக விசாரித்ததில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மனு அளித்த நபர்கள் அங்கு வசிப்பது தெரியவந்தது. அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலேயே தடை நீக்கப்பட்டது.
மனுதாரருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை. மூன்றாம் நபர் வழக்கு தொடர இயலாது. எனவே, மனுவை வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டது.
அறநிலையத் துறை தரப்பில், ‘ஏற்கெனவே மனுதாரர் இந்த கோயில்களின் அறங்காவலர், செயல் அலுவலர் நியமனம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். 50 ஆண்டுகளுக்கு முன்பே செட்டில்மென்ட் பட்டா வழங்கப்பட்டவர்களின் கோரிக்கை அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன என்பது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசுத் தரப்பில் ஜூலை 29-ம் தேதி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆகஸ்ட் 11-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என தெரிவித்தனர்.

More Stories
“பெண்களை தவெகவினரிடம் பாதுகாக்கவே மேலும் ஓர் அதிரடிப்படை தேவை” – தினகரன் விமர்சனம்
“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை” – குதிரை பேரம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
ரூ.139 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்கள் – முதல்வர் விஜய் திறந்து வைப்பு