February 12, 2026

கர்நாடகாவின் லாட்லி மஷாக் தர்காவில் சிவராத்திரி கொண்டாட தடை கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

கர்நாடகாவின் லாட்லி மஷாக் தர்காவில் சிவராத்திரி கொண்டாட தடை கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மோகன் கணபதி

புதுடெல்லி: கர்நாடகாவின் ஆலந்தில் உள்ள லாட்லி மஷாக் தர்காவில் சிவராத்திரி கொண்டாட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடகாவின் ஆலந்தில் உள்ள லாட்லி மஷாக் தர்கா வளாகத்தில், 14-ம் நூற்றாண்டை சேர்ந்த சூஃபி துறவியின் சமாதியும், 15-ம் நூற்றாண்டின் இந்து துறவி ராகவ சைதன்யரின் சமாதியும் உள்ளது. வரலாற்று ரீதியாக இது ஒரு பகிரப்பட்ட வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மத உரிமை தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக இங்கு மதக் கலவரம் ஏற்பட்டது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த 2025, பிப்ரவரியில் அளித்த தீர்ப்பில், ராகவ சைதன்ய சிவலிங்கத்தில், சிவராத்திரியின்போது 15 இந்து பக்தர்கள் வழிபடவும், சடங்குகளைச் செய்யவும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கலீல் அன்சாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவில், ‘‘தர்காவுக்குள் சட்ட விரோதமாகச் செல்வதை தடுக்க வேண்டும். தர்காவுக்குள் தனி நபர்கள் ஒன்றுகூடுவதை தடுக்க வேண்டும். தர்காவுக்குள் செல்லவும், பூஜை செய்யவும் வழங்கப்பட்ட இடைக்கால அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரி இருந்தார்.

மேலும் அவர், ‘‘இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. இது முறையாக அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து. இது வக்பு தீர்ப்பாயத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்’’ என்றும் தனது மனுவில் கோரி இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘பிரச்சினை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கில் 32வது பிரிவை மனுதாரர் பயன்படுத்த முடியாது’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Spread the love