Karnataka CM Siddaramaiah Resigning Reason: கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்து வரும் சித்தராமையா இன்றைய தினம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
கர்நாடகவில் 2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த வரும் சித்தராமையா இன்றைய தினம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக துணை முதலைமச்சர் டி.கே.சிவக்குமார் பதவியேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது, அது குறித்து விரிவாக பார்ப்போம்.
காங்கிரஸ் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பொதுச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அப்போது, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே யார் முதலமைச்சராவது என்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக சித்தராமையாவே முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் சித்தராமையா ராஜினாமா
சித்தராமையா கட்சியின் செல்வாக்கு மிக்க மக்கள் தலைவராகக் கருதப்படுபவர். இவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் இடையே வலுவான ஆதரவு தொடர்ந்து இருக்கிறது. இப்படியான சூழலில், இன்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், பதவி விலகல் கடிதத்தை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இரண்டரை ஆண்டு ஒப்பந்தம்
இவர் திடீரென பதவியை ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம்? 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்ற பிரச்சனை எழுந்த நிலையில், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என கட்சி மேலிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது, சித்தராமையா இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.
அதன்படி, கடந்த நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் பதவியேற்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் போர் கொடி தூக்கினார். 5 மாநில தேர்தல் முடிவடைந்த பிறகு இதுகுறித்து தீர்மானிக்கப்படும் என்று கட்சி மேலிடம் உறுதியளித்து இருந்த நிலையில், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து சித்தராமையாவும் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையின் வாக்குறுதி
அதேசமயம், சித்தராமையாவின் மகனுக்கு இந்த முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவருடைய மகனுக்கு உரிய பதவியை வழங்குவதாக கட்சி மேலிடம் அவருக்கு உறுதியளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வருகின்ற மாநிலங்களவை தேர்தலில் சித்தராமையாவை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய இருப்பதாகவும் கட்சி மேலிடம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சி தலைமையின் வாக்குறுதியை மறுக்க முடியாமல் இவர் இந்த ராஜினாமாவுக்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்?
சித்தராமையா பதவி விலகல் கடிதம் ஒப்புக்கொள்ளப்பட்டதும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக தற்போது துணை முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் டி.கே.சிவக்குமார் பதவியேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர், முதலமைச்சராக பதவியேற்கும் பட்சத்தில், கர்நாடகாவின் துணை முதலமைச்சர் பதவி காலியாகிறது. இதையடுத்து, காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தபடி, சித்தராமையாவின் மகன் டாக்டர் யதீந்திராவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More Stories
மம்தா அரசின் திட்டம் | 30 லட்சம் பயனாளிகளை நீக்கிய புதிய பாஜக அரசு!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சீருடையின் சிறப்புகள் – லோகோவை கவனிச்சீங்களா?
அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து