பெங்களூரு: கர்நாடகாமுதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்பார் என்று கர்நாடகா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜி.சி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின்னர், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியையும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கியது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க ‘அதிகார பகிர்வு’ ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சித்தராமையாவை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லிக்கு அழைத்தார். மூத்த தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து மே 28 அன்று சித்தராமையா பதவி விலகினார்.
இந்நிலையில், வரும் ஜூன் 3-ம் தேதி மாலை 5.15 மணியளவில் டி.கே.சிவகுமார் கர்நாடகா முதல்வராக பதவியேற்பார் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
இறை நம்பிக்கையும், ஜோதிட நாட்டமும் கொண்ட டி.கே.சிவகுமாருக்கு ஜோதிடர்களே ஜூன் 3-ம் தேதியில் மாலை 5.15 மணி முதல்வராக பதவியேற்க நல்ல நேரம் என்று குறித்துக் கொடுத்ததாக தகவல்.
இன்று நடைபெறவுள்ள காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தில் டி.கே.சிவகுமார் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கர்நாடக முதல்வராக சிவகுமார் முன்மொழியப்பட்டத்தில் சித்தராமையாவுக்கு வருத்தம் என்று சலசலக்கப்படும் நிலையில், மாநில அமைச்சர் முனியப்பா இன்று அளித்தப் பேட்டியில், “சித்தராமையா – டி.கே.சிவகுமார் இடையே எந்த உரசலும் இல்லை. டிகேஎஸ் முதல்வராவதற்கு முழு சம்மதத்தையும் சித்தராமையா ஏற்கெனவே வழங்கிவிட்டார். சட்டமன்றக் குழு கூட்டம் நடத்த வேண்டியது மட்டுமே மிச்சம்” என்று கூறியது கவனிக்கத்தக்கது.

More Stories
அசாம் மாநில திரிணமூல் தலைவர் அபிஜித் விலகல்
கேரள சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடப்படாதது குறித்து ஆளுநர் அர்லேகர் அதிருப்தி
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்