சென்னை: தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டப்படி, கல்விக் கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25-ம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இந்நிலையில் மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்ற போதும், தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டப்படி நியாயத் தன்மையை வெளிப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

More Stories
“திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்” – வைகோ கிண்டல்
“முதல்வர் விஜய் கரூர் செல்வதால் திமுகவுக்கு என்ன பயம்?” – அமைச்சர் நிர்மல் குமார்
“தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்குக” – அன்புமணி