
மறைந்த அயத்துல்லா அலி காமேனி
பெங்களூரு: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இந்நிலையில் காமேனி கடந்த 1980,81 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு வருகை புரிந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
அதாவது, அயத்துல்லா அலி காமேனி கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்ற கிராமத்துக்கு 2 முறை வருகை தந்துள்ளார். அந்த ஊரில் 30,000-க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் வாழ்வதால் அவர்களுக்காக சிறப்பு தொழுகை நடத்தினார்.
அவர் வந்து சென்ற பின்னர், ஈரான் அரசின் உதவியுடன் அலிப்பூரில் காமேனி பெயரில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது. இப்போதும் இயங்கி வரும் இந்த மருத்துவமனையால் அங்குள்ள மக்கள் பெரிதும் பயனடைகின்றனர். இதன் பிறகு அலிப்பூரை சேர்ந்தவர்களுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தற்போது 150 முதல் 200 பேர் வரை ஈரானில் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் காமேனியின் மறைவையொட்டி அலிப்பூரில் மக்கள் கருப்பு உடை அணிந்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது அமெரிக்கா, இஸ்ரேல் அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 3 நாட்கள் கடைகள் உள்ளிட்டவற்றை அடைத்து துக்கம் அனுசரிப்பதாகவும் வணிகர்கள் அறிவித்தனர். அங்குள்ள ஷியா முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் ஆகியவற்றில் கருப்பு கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

More Stories
“காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் நடுநிலையல்ல; பொறுப்பை துறப்பது” – சோனியா காந்தி
சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
மோடியின் வாராணசி தொகுதியில் ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை