திருவனந்தபுரம்: கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது. சரண கோஷத்துடன் பதினெட்டாம் படி ஏறி விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம். முதல் நாளான இன்று 80,000 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகியது. வழக்கமாக மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளின் போதும், மாத பூஜைகளின் போதும் மாலை 5 மணிக்குத் தான் நடை திறக்கப்படும். ஆனால் இவ்வருடம் மண்டலகால பூஜைகளுக்கு நடைதிறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் நிலக்கல்லில் தங்க வைக்கப்பட்டனர்.
நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து வழக்கத்தை விட 1 மணிநேரம் முன்னதாக நடை திறக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று மாலை 4 மணியளவில் தந்திரி கண்டரர் பிரம்மதத்தன் முன்னிலையில் பழைய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து அவர் 18ம் படி வழியாக இறங்கி ஆழி குண்டத்தில் தீ மூட்டிய பின்னர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சாந்திகளை சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றார்.
மாலை 6.30 மணியளவில் கோயில் முன் வைத்து சபரிமலையின் புதிய மேல்சாந்தியான சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரிக்கு தந்திரி அபிஷேகம் செய்து ஐயப்பனின் மூல மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். இதேபோல் மாளிகைப்புரம் கோயிலின் புதிய மேல்சாந்தியாக தாமோதரன் நம்பூதிரி பதவியேற்கும் நிகழ்வும் நடைபெற்றது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு கோயில் நடை தாழ்த்தப்பட்டது.
கார்த்திகை 1ம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்திகள் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் நடைகள் திறந்ததை தொடர்ந்து மண்டல கால பூஜைகள் முறைப்படி தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்படுவதோடு மண்டல கால பூஜைகள் நிறைவடையும். தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறும்.

More Stories
ஆற்று மணலுடன் கடற்கரை மணல் கலந்து விற்பனை புகார்: செங்குன்றம் அருகே கனிம வளத்துறை அமைச்சர் ஆய்வு
புதிய கடன் பெற முடியாமல் தவிக்கும் தமிழக விவசாயிகள்!
கந்தசஷ்டி திருவிழா நிறைவு: பழநியில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்