August 26, 2026

“காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவை உடனடியாக செயல்படுத்துவீர்” – கர்நாடகாவுக்கு இ.கம்யூ வலியுறுத்தல்

சென்னை: “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மதித்து, கர்நாடக அரசு உடனடியாக தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும்,” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹைதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுத் தரப்பின்  நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணையம், கர்நாடகம் காவிரியில் தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு, வினாடிக்கு 9000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 வரை 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி நீரை திறந்து விடுமாறும், பின்னர் ஆகஸ்ட் 12 முதல் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடுமாறும் கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கர்நாடக அரசும் அதன் அதிகாரிகளும் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை நடைமுறை படுத்தவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு நடைமுறை படுத்தாததை எதிர்த்தும், அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது வரவேற்பிற்குரியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மதித்து, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கர்நாடக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love