ஸ்ரீநகர்: வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது கட்டாயம் என்று நாடு முழுவதும் சட்டம் அமலில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “காஷ்மீரிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் வந்தே மாதரம் முழு பாடல் பாடப்பட்டது. இரு மூத்த தலைவர்களின் ஆதரவுடனேயே வந்தே மாதரம் முழு பாடல் பாடப்பட்டது.
இந்நிலையில், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால், “வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தையும் பாட வேண்டாம். அந்தப் பாடலின் குறுகிய வடிவத்தை மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் உருவாக்கி நமக்குத் தந்துள்ளனர். எனவே, அவர்களின் ஞானத்தையும் தீர்ப்பையும் மதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுடன் தேசிய மாநாட்டுக் கட்சி இணைந்து நிற்க வேண்டும்” என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள உமர் அப்துல்லா, “தேசியப் பாடல் தொடர்பாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து வரிகளையும் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீருக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் பொருந்தும். நாடு முழுவதும் உள்ள அரசு நிகழ்ச்சிகளுக்கான விதிமுறை இதுவே. இதைப் பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் காஷ்மீரிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா?.
ஒரு கட்சியாக, நாங்கள் ‘வந்தே மாதரம்’ பாடலை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை, இனிமேலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் சட்டப்பூர்வமான கடமைகளுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவிலும் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் இசைக்கப்படும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்துப் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பஷீர் அகமது, “கூட்டணிக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டுமா அல்லது எவ்வளவு பாட வேண்டும் என்று எங்கள் கட்சிக்கு உத்தரவிடத் தேவையில்லை. கருத்தைச் சொல்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபாலுக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை கூட்டணிக் கட்சிகள் மீது திணிக்க வேண்டாம். இது மக்களின் விருப்பம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மேலும், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவும் அளித்து வருகிறது.

More Stories
‘புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பதா?’ – ஜவாஹிருல்லாவுக்கு முஸ்தபா கண்டனம்
மிசா காலகட்டத்தில் விஜய்க்கு வயது ஒன்று” – வரலாறு அறிந்து விமர்சிக்க திருச்சி சிவா எம்.பி. அறிவுரை
“புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்” – அமைச்சர் அமைச்சர் வன்னியரசு