February 21, 2026

கிருஷ்ணகிரி – போச்சாம்பள்ளி பகுதியில் ராகி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!

போச்சம்பள்ளியில் இருந்து வேலம்பட்டி செல்லும் சாலையில் வீரமலை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள ராகி கதிர்கள், செழித்து வளர்ந்துள்ளன.

போச்சம்பள்ளியில் இருந்து வேலம்பட்டி செல்லும் சாலையில் வீரமலை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள ராகி கதிர்கள், செழித்து வளர்ந்துள்ளன.

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராகி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் ராகி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ராகி பயிர் செய்கின்றனர்.

குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களிலும், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் ராகி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 36 ஆயிரத்து 746 ஹெக்டேர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும், ராகி சாகுபடியில் ஹெக்டேருக்கு, 1.5 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ராகி தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

பிஸ்கட், நூடுல்ஸ், களி, கூழ் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள் தயாரிக்கவும், கோழி தீவனத்துக்கும் ராகி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக ராகியை கொள்முதல் செய்வதால், விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ராகி சாகுபடி பரப்பை அதிகரித்து வருகின்றனர்.

குறிப்பாக, போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் ராகி சாகுபடி செய்துள்ள நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் ராகி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் ராகி பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசே ராகி கொள்முதல் செய்வதால், விவசாயிகளிடம் ராகி பயிர் செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதனால், போச்சம்பள்ளி பகுதியிலும் ராகி கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தருமபுரி, நீலகிரி மாவட்டத்தில் வழங்குவதை போல், அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலைக்கடைகளில் ராகி வழங்கினால், நுகர்வும், சாகுபடி பரப்பும் அதிகரிக்கும் என்றனர்.

இதுகுறித்து வேளாண்மை அலுவலர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு 6 இடங்களிலும், நிகழாண்டில் 8 இடங்களிலும் நேரடி ராகி கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு டன் ராகிக்கு ரூ.48,860 வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு (2024-25) 2,600 டன் ராகியும், நிகழாண்டில் (டிசம்பர் 2025 வரை) 960 டன் ராகியும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைக்கும்பட்சத்தில், அதனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். போச்சம்பள்ளி பகுதியில் ராகி கொள்முதல் நிலையம் அமைக்க பரிசீலனையும், ராகி வரத்தைப் பொறுத்து நடவடிக்கையும் எடுக்கப்படும், என்றனர்.

Spread the love