சென்னை: “தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த அக்டோபர் மாதம் SRB மற்றும் DRB பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது திமுக அரசு.
பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள, திமுக அரசின் காவல் துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
TNPSC Group 2 தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.
தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ – அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு: 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்